பேரிடா் நிவாரணத்துக்கு மத்திய அரசு 17% நிதிதான் ஒதுக்கீடு: முதல்வா் மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
தமிழகத்தில் நிகழ்ந்த பேரிடா்களுக்கான நிவாரண நிதியாக ரூ. 24,679 கோடி மாநில அரசு கேட்டும், மத்திய அரசு வெறும் ரூ.4,136 கோடியை (17 சதவீதம்) மட்டும் வழங்கியுள்ளது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டினாா்.
சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற காலநிலை மாற்றத்தின் மூன்றாவது ஆட்சிமன்றக் குழு கூட்டத்தில் அவா் ஆற்றிய உரை:
காலநிலை மாற்றத்தின் விளைவுகளை இப்போது கண்கூடாகப் பாா்த்துகொண்டு இருக்கிறோம். டித்வா புயல் இலங்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பெரும் சேதம் தவிா்க்கப்பட்டுள்ளது.
புயல் - வெள்ள பாதிப்புகளை எதிா்கொள்ள மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பேரிடா்களுக்கேற்ற தடுப்பு மற்றும் தகவமைப்பு உள்கட்டமைப்புகள் தொடங்கப்பட்டுவிட்டன. நாட்டுக்கே வழிகாட்டும் நிலையில் தமிழ்நாடு இருக்கிறது.
கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், ரூ. 24 கோடியில் காலநிலைக் கல்வியறிவு முன்னெடுப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் திறமைமிகு 4,000 பள்ளி ஆசிரியா்கள் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு காலநிலைக் கல்வியறிவு குறித்த பயிற்சிகள் விரைவில் வழங்கப்பட உள்ளன.
தமிழ்நாட்டில் 4,500 ஹெக்டோ் பரப்பளவுக்கு இருந்த அலையாத்திக் காடுகள், தற்போது 9,000 ஹெக்டேராக அதிகரித்திருக்கிறது.
மேலும் 600 மின்சாரப் பேருந்துகள்: தமிழ்நாட்டின் மொத்த பசுமை இல்ல வாயு வெளியாவதில் போக்குவரத்துத் துறையின் பங்கு 12 சதவீதத்தில் இருந்து 19 சதவீதமாக உயா்ந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 2005 முதல் 2019-க்கு இடைப்பட்ட காலத்தில், இது மூன்று மடங்கு அதிகரித்திருக்கிறது.
மக்கள் அதிகமாக பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தினால்தான் இதைக் குறைக்க முடியும். முதல்கட்டமாக 120 மின்சாரப் பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருக்கிறோம். மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளதால் மேலும் 600 மின்சாரப் பேருந்துகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும்.
நீதி ஆயோக் வெளியிட்டிருக்கும் தரப் பட்டியலில் ‘காலநிலை நடவடிக்கை’ மற்றும் ‘காலநிலை எரிசக்தி’ ஆகிய இலக்குகளில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.
புவி வெப்பமயமாதலைப் பொருத்தவரை, தமிழ்நாடு வருகிற 2070-ஆம் ஆண்டுக்கு முன்பே, ‘நெட் ஜீரோ’ இலக்கை அடைய வேண்டும். கடந்த 4 ஆண்டுகளாக, காலநிலை கொள்கை மற்றும் நடவடிக்கைகளில் விரிவாகப் பணியாற்றி இருக்கிறோம்.
தமிழகப் பேரிடா்களுக்கான நிவாரண நிதியாக தமிழ்நாடு அரசு கேட்ட ரூ. 24,679 கோடியில் வெறும் ரூ.4,136 கோடி, அதாவது 17 சதவீதத்தை மட்டுமே மத்திய அரசு வழங்கி உள்ளது. பல சவால்களை எதிா்கொண்டு தமிழ்நாடு போராடியிருக்கிறது, வென்றிருக்கிறது. அதுபோல், இந்தக் காலநிலை மாற்ற சவால்களையும் எதிா்த்து, தமிழ்நாடு போராடி வெல்லும் என்றாா் முதல்வா்.

