

இன்று வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 66,44,881 நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், சிவகங்கை மாவட்டத்தில் 1,50,828 மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,39,587 வாக்காளர்கள் நீக்கம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்ததாக அறிகிறேன். காங்கிரஸ் கட்சியின் பூத் கமிட்டி உறுப்பினர்கள் இறுதி வாக்காளர் பட்டியலை எடுத்துக் கொண்டு வீடு வீடாகச் சென்று சரி பார்க்க வேண்டியுள்ளேன்.
இத போன்று எல்லா அரசியல் கட்சிகளும் செய்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன். தேர்தல் ஆணையத்தை விட தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகள் விழிப்புடன் இருக்கிறார்கள் என்று நிரூபிக்க வேண்டும். தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் இறந்தவர்கள் எண்ணிக்கை 26,32,672 மற்றும் இரட்டைப் பதிவுள்ளவர்கள் எண்ணிக்கை 3,39,278 என்பதை ஏற்றுக் கொள்ளலாம்.
முகவரி இல்லாதவர்கள் எண்ணிக்கை 66,44,881 என்பதுதான் நெருடுகிறது. எல்லா அரசியல் கட்சிகளின் தோழர்களும் இந்த எண்ணில் கவனம் செலுத்தவேண்டும். இவ்வளவு நபர்கள் முகவரி இல்லாமல் இருந்திருக்கிறார்கள் அல்லது இருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது.
மெய்யான நபர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படக்கூடாது என்பது தான் நம்முடைய நோக்கம். வாக்காளர் பட்டியலில் தன் பெயர் இல்லை என்று யாரும் அதிர்ச்சியடைய வேண்டாம்.
பட்டியலில் உங்கள் பெயரைச் சேர்ப்பதற்குக் கால அவகாசம் இருக்கிறது, சட்டத்தில் வழி இருக்கிறது.
உங்கள் பெயர் இல்லை என்று தெரிந்தவுடன் தமிழ்நாட்டின் முக்கிய கட்சிகளில் ஒன்றை அணுகவும். காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவர் அல்லது வட்டாரத் தலைவர் உங்கள் பெயரைப் பட்டியலில் சேர்ப்பதற்கு உதவி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்களை அணுகுங்கள். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் மாவட்டவாரியாக இன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு(எஸ்ஐஆர்) முன்பு 6.41 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில் தற்போது 5.43 கோடி வாக்காளர்கள் மட்டுமே உள்ளனர்.
எஸ்ஐஆர் நடவடிக்கைகளில் மொத்தம் 97,37,832 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.