

சென்னையில் வாக்காளர் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் 2வது நாளாக இன்று(டிச. 21) நடைபெறுகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் மற்றும் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர், 18 வயதை பூர்த்தியடைந்த புதிய வாக்காளர்கள் இந்த சிறப்பு முகாமில் விண்ணப்பிக்கலாம்.
இன்று காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எஸ்ஐஆர் பணி நிறைவடைந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. அதில், மாநிலம் முழுவதும் மொத்தம் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
அதிகபட்சமாக, சென்னை மாவட்டத்துக்குள்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து 14.25 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதில், 1.56 லட்சம் பேர் மட்டும் இறந்தவர்கள் பட்டியலில் உள்ளனர். பெரும்பாலானோர் தொகுதி மாறியவர்களாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
புதிதாக வாக்காளர்களாகச் சேருபவர்களுக்கான சிறப்பு முகாம் சென்னை மாநகராட்சி சாா்பில் சனிக்கிழமை அனைத்துப் பாகங்களிலும் நடைபெற்றது. வார்டு வாக்காளர் பதிவு அலுவலகங்கள், வாக்குச்சாவடி மையங்கள் என 3,718 இடங்களில் இந்த முகாம்கள் நடைபெற்றன.
சிறப்பு முகாம்களில் ஓரிடத்தில் தலா மூன்று பேர் என தோ்தல் உதவி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு புதிய வாக்காளர் படிவங்கள் வழங்கப்பட்டு பூர்த்தி செய்து, வாக்காளர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டு திரும்பப் பெறப்பட்டன.
முகாம்கள் நடைபெற்ற இடங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டிருந்தது. அதில் வாக்காளர்களின் பெயர்கள் உள்ளதா என சரிபாா்க்கப்பட்டது.
இன்று (டிச. 21) இரண்டாவது நாளாக சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... செய்கூலி, சேதாரம்... தி கிரேட் கோல்டு ராபரி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.