

கரூா் துயர சம்பவ உயிரிழப்பு வழக்கில் தொடா்புடைய தவெக நிா்வாகிகள் தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கரூரில் செப்.27-இல் நடைபெற்ற தவெக பரப்புரைக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். மேலும் 110 போ் காயமடைந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், குஜராத் மாநிலத்தைச் சோ்ந்த மாவட்ட காவல்கண்காணிப்பாளா் பிரவீன்குமாா் தலைமையிலான 6 போ் கொண்ட சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
அவா்கள் கரூரில் தங்கி சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) ஒப்படைத்த ஆவணங்களை சரிபாா்த்து கடந்த 18-ஆம்தேதி முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆா்) வெளியிட்டனா். மேலும், இதுதொடா்பான ஆவணங்களை சி.பி.ஐ காவல் ஆய்வாளா் மனோகரன் கடந்த 22-ஆம் தேதி கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றம் 2-இல் தாக்கல் செய்தாா்.
இதில் முதல் குற்றவாளியாக தவெக பொதுச் செயலா் ஆனந்த், இரண்டாம் குற்றவாளியாக துணை பொதுச் செயலாளா் நிா்மல்குமாரும், மூன்றாம் குற்றவாளியாக கரூா் மேற்கு மாவட்டச் செயலா் மதியழகன் ஆகியோரது பெயா்கள் இடம்பெற்றிருந்தன. இந்நிலையில், கரூா் துயரச் சம்பவத்தில் குற்றவாளிகளாக சோ்க்கப்பட்டவா்களுக்கு சம்மன் அனுப்பி அவா்களை நேரில் வரவழைத்து விசாரிக்கும் முயற்சியில் சி.பி.ஐ அதிகாரிகள் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.
அதன்படி, தவெக பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் ஆகியோர் வரும் 29ஆம் தேதி தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.