தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளனர் என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் குற்றஞ்சாட்டினார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் தற்போது கலாச்சார போர் நடைபெற்று வருவதாகவும், சமூக நீதி விவகாரங்களில் அரசின் கவனம் குறைந்து உள்ளதாகவும் அவர் கூறினார். ஈரோடு, கரூர் பகுதிகளில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் சமைத்த உணவைப் பரிமாற அனுமதிக்கவில்லை என்ற சம்பவத்தை சுட்டிக்காட்டிய அவர், இது மிகுந்த வருத்தம் அளிப்பதாக தெரிவித்தார். இவ்விவகாரங்களில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
போக்குவரத்து கட்டண உயர்வை குறித்து பேசுகையில், ரயில் கட்டணம் குறைவாக இருந்தாலும், ஆம்னி பேருந்து கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்து உள்ளதாகவும், பண்டிகை காலங்களில் மக்கள் கடும் சுமையை சுமக்க வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு இதை முதன்மையாக கவனிக்க வேண்டும் எனக் கூறினார். தமிழ் மொழி மற்றும் பண்பாட்டை கொண்டாடுவதில் மத்திய அரசு, குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி முனைப்புடன் செயல்படுவதாகவும், காசி தமிழ்ச் சங்கமம், சௌராஷ்ட்ரா தமிழ்ச் சங்கமம் போன்ற நிகழ்வுகளை எடுத்துக்காட்டினார்.
தமிழை கொண்டாடுவது பா.ஜ.க என்றும், தமிழை திண்டாட வைப்பது தமிழக அரசு என்றும் விமர்சித்தார். ஆசிரியர் மற்றும் கல்லூரி விரிவுரையாளர் தேர்வுகளில் திராவிட முன்னேற்ற கழகத்தின் சாதனைகள் குறித்து கேள்விகள் இடம்பெற்று உள்ளதாக குற்றம்சாட்டிய அவர், இது வெளிப்படையான பாரபட்சம் எனக் கூறி கடும் கண்டனம் தெரிவித்தார்.
பெண்கள் மாநாடு நடத்தும் அரசு, அதே நேரத்தில் செவிலியர்கள், துப்புரவு தொழிலாளர்கள், இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் துன்புறுத்தப்படுவதாகவும், அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் கூறினார். இவை அனைத்தும் தற்போதைய ஆட்சியின் அவலத்தை வெளிப்படுத்துவதாக விமர்சனம் செய்தார்.
தமிழ்நாட்டின் கடன் சுமையை சுட்டிக்காட்டிய அவர், ஒருவருக்கு ரூ.1.27 லட்சம் கடன் சுமை இருப்பதாகவும், ரூ.1,000 உதவித் தொகை வழங்கி பெரிய கடன் சுமையை மக்களின் தலைமேல் ஏற்றுவது திராவிட மாடல் ஆட்சி என்று விமர்சித்தார். மத்திய அரசை விமர்சிப்பவர்களை உடனே “சங்கி” எனக் குற்றம்சாட்டும் போக்கு அதிகரித்து உள்ளதாகவும், கலாச்சாரம், மொழி, பாரம்பரியத்தை போற்றுபவர்கள் அனைவரையும் சங்கிகள்தான்.
பெண்கள் அரசியல், சமூக வாழ்க்கையில் எல்லை கடந்து வெற்றி பெற வேண்டும் என்பதே தனது விருப்பம் எனப் பேசிய அவர், ஆனால் தமிழ்நாட்டில் பெண்கள் அதிகமாக பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாக குற்றம்சாட்டினார். இதனால் மாநிலத்தில் மாற்றம் அவசியம் எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.