ஸ்ரீரங்கம் கோயிலில் பரமபதவாசல் திறப்பு!

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பரமபதவாசல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு திறக்கப்பட்டதைப் பற்றி...
பரமபதவாசல் வழியாக கடந்து சென்று பிரவேசித்த நம்பெருமாள்.
பரமபதவாசல் வழியாக கடந்து சென்று பிரவேசித்த நம்பெருமாள்.
Updated on
1 min read

திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் பரமபதவாசல் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு திறக்கப்பட்டது.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும், 108 வைணவத் தலங்களில் முதன்மையான கோயிலுமான ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் திருஅத்யயன உத்ஸவம் எனப்படும் வைகுந்த ஏகாதசி திருவிழா கடந்த 19 ஆம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது.

டிச. 20 ஆம் தேதியில் பகல்பத்து உத்ஸவமும், பத்தாம் நாளில் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாள் எழுந்தருளுதலும் நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரமபதவாசல் திறப்பானது இராப்பத்து திருவிழாவின் முதல் நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலை நடைபெற்றது.

திருப்பள்ளியெழுச்சிக்குப் பிறகு நம்பெருமாள், ரத்தின அங்கியுடன் பாண்டியன் கொண்டை, கிளிமாலை உள்பட பல்வேறு சிறப்பு திருவாபரணங்கள் அணிந்து கருவறையிலிருந்து அதிகாலை 4.30 மணிக்கு தனுர் லக்னத்தில் சிம்ம கதியில் புறப்பட்டார்.

சந்தனு மண்டபம், வலதுபுற மதில்படி வழியாக இரண்டாம் பிரகாரம் எனப்படும் ராஜமகேந்திரன் திருச்சுற்று வழியாக, பிரகாரம் வலம் வந்து நாழிகேட்டான் வாயிலைக் கடந்தார் நம்பெருமாள்.

இதையடுத்து, மூன்றாம் பிரகாரத்திலுள்ள தங்கக் கொடிமரம் வழியாக துரைப்பிரதட்சணம் செய்து, குலசேகரன் திருச்சுற்று வழியாக, விரஜாநதி மண்டபத்தை வந்தடைந்தார்.

இதைத் தொடர்ந்து, பரமபதவாசலை வந்தடைந்த நம்பெருமாள், ஸ்தானீகர் கட்டியம் கூற சரியாக அதிகாலை 5.45 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது.

பக்தி முழக்கத்துடன் பிரவேசம்...:

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் புடைசூழ ‘ரங்கா... ரங்கா...’ என்ற பக்தி முழக்கங்களுக்கிடையே பரமபதவாசல் வழியாக கடந்து சென்று பிரவேசித்தார் நம்பெருமாள். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

பரமபதவாசல் வழியாக கடந்து சென்று பிரவேசித்த நம்பெருமாள்.
சிதம்பரம் தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோவிலில் பரமபத வாசல் திறப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com