

தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துங்கள் என மாவட்டச் செயலாளர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று(டிச. 31) நடைபெற்றது.
தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து தேர்தல் பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் 180 தொகுதிகளில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்துள்ள நிலையில் மீதமுள்ள தொகுதிகளிலும் பிரசாரம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கிராமப்புற பகுதிகளில் அதிமுக - பாஜக கூட்டணியால் மக்கள் அதிருப்தியில் இருப்பதாக கூட்டத்தில் பேசப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், 'எஸ்ஐஆர் பணிகளில் அதிமுகவினர் சரியாக வேலை செய்யவில்லை, நீக்கப்பட்ட அதிமுகவினரின் வாக்குகள் சேர்க்கப்பட வேண்டும், அதிமுகவினரின் ஒருவரின் வாக்குக்கூட விடுபட்டு விடக்கூடாது, எஸ்ஐஆர் பணிகளை மாவட்டச் செயலாளர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும், ஐடி விங் ஊழியர்கள் தங்கள் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். கூட்டணியை நான் பார்த்துக் கொள்கிறேன், நீங்கள் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துங்கள்' உள்ளிட்ட அறிவுறுத்தல்களை இபிஎஸ் வழங்கியதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.