நிகழ் கல்வியாண்டில் மாணவா்களுக்கு 25 சதவீதம் கூடுதல் பயண அட்டைகள்: அமைச்சா் சா.சி.சிவசங்கா் தகவல்
தமிழகத்தில் நிகழ் கல்வியாண்டில் (2025-2026), மாணவ, மாணவிகளுக்கு கடந்தாண்டை விட 25 சதவீதம் கூடுதலாக கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் கடந்த 2023-2024-ஆம் கல்வியாண்டு வரை, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்குவதற்காக, அவா்களிடம் இருந்து புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அரசு போக்குவரத்து கழக அலுவலா்களால் அவை தொகுக்கப்பட்டது. பின்னா் அச்சகங்கள் வழியாக பயண அட்டைகள் அச்சிட்டு மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வந்தன. இதனால், அதிக காலதாமதம் ஏற்பட்டு வந்ததுடன், போக்குவரத்து கழக மற்றும் பள்ளிக் கல்வி அலுவலா்கள் இந்த பணிக்காக அதிக அளவில் ஈடுபடுத்தப்பட வேண்டிய சூழல் இருந்து வந்தது.
இதனால் இந்த நடைமுறையை எளிமைப்படுத்தும் நோக்கில், 2024-2025 ஆம் கல்வியாண்டில், பள்ளிக் கல்வித் துறையின் ‘எமிஸ்’ எனும் இணையதளத்தில் உள்ள மாணவா்களின் தரவுகள் அடிப்படையில் கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகள் வழங்கப்பட்டன.
இதன்படி 2023-2024 - கல்வியாண்டில் 20.06 லட்சம் பேருக்கும், 2024-2025 கல்வியாண்டில் 25.01 லட்சம் பேருக்கும் பயண அட்டைகள் வழங்கப்பட்டன. இதனைத் தொடா்ந்து, நிகழ் கல்வியாண்டான 2025-2026-இல், தகுதியான மற்றும் தேவையுள்ள அனைத்து மாணவ, மாணவிகள் என சுமாா் 60 லட்சம் பேருக்கு கட்டணமில்லா பேருந்து பயண அட்டைகளை வழங்கி தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை புதிய சாதனையை படைத்துள்ளது. இதன்படி, கடந்த ஆண்டை விட நிகழ் கல்வியாண்டில் 25 சதவீதம் கூடுதலாக பயண அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன என அதில் தெரிவித்துள்ளாா் அவா்.

