47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பெண்கள், குழந்தைகளைப் பாதுகாக்க சட்டத்தை கடுமையாக்க வேண்டும்: சீமான்

பெண்கள், குழந்தைகளைப் பாதுகாக்க சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

News image
சீமான்.
Updated On :7 பிப்ரவரி 2025, 4:36 pm

DIN

பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் பெண்கள், குழந்தைகளைப் பாதுகாக்க சட்டத்தை கடுமையாக்க வேண்டும் என நாம்தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகேயுள்ள போச்சம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நால்வர் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ள நிகழ்வு பெரும் அதிர்ச்சியும், ஆத்திரத்தையும் ஏற்படுத்திய நிலையில், அந்த வேதனை செய்தி மறைவதற்குள் மணப்பாறை மணப்பாரப்பட்டியில் தனியார் பள்ளி சிறுமிக்கு தாளாளர் உள்ளிட்டோர் பாலியல் துன்புறுத்தல் எனும் செய்தி இதயத்தை நொறுங்கச் செய்கிறது.

திமுக ஆட்சியில் பள்ளிக்குழந்தைகள் முதல் பல்கலைக்கழக மாணவி வரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் கொடுமைகள் வார்த்தைகளால் சொல்லிமாளக்கூடியதல்ல. அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கி கலைஞர் பேருந்து நிலையம் வரையில் பெண்கள் எங்குமே பாதுகாப்பாகச் செல்ல முடியாத அளவிற்கு தமிழ்நாட்டில் கொடுஞ்சூழல் நிலவுகிறது.

தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு என்ற ஒன்றே இல்லாமலாக்கி, பெண்களுக்குப் பாதுகாப்பற்ற நிலமாக மாற்றி இருப்பதுதான் திமுக அரசின் நான்கு ஆண்டு காலச் சாதனையா? இதுதான் உலகம் வியக்கும் திராவிட மாடல் ஆட்சியா? பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் ரத்தக்கண்ணீர் வடித்துக்கொண்டிருக்கும் வேளையில் காவல்துறையை தனது நேரடிக்கட்டுபாட்டில் வைத்துள்ள தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், பாதிக்கப்படும் பள்ளிக் குழந்தைகள் பற்றி துளியும் கவலையின்றி, திருநெல்வேலியில் அல்வாவை ரசித்து ருசித்து சாப்பிட்டுகொண்டிருக்கிறார் என்பதுதான் வேதனையின் உச்சம்.

இனியும் இத்தகைய மெத்தனப்போக்கு தொடர்ந்தால் பெண்களும், குழந்தைகளும், பெற்றோரும் அல்லற்பட்டு ஆற்றாது சிந்தும் வேதனைக் கண்ணீரின் வெப்பத்தில் திமுக ஆட்சி அழிவது உறுதி!

ஆகவே, போச்சம்பள்ளி, மணப்பாரப்பட்டி மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் பெற்ற மகள்போல போற்றிப் பாதுகாக்க வேண்டிய பிஞ்சு குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிச் சிதைக்கும் கொடூரர்களை சட்டத்தின் முன் நிறுத்தி மிகக்கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இதுபோன்ற கொடுமைகள் இனியும் தொடராவண்ணம் பெண்கள், குழந்தைகளைப் பாதுகாத்திட சட்டத்தை கடுமையாக்கிவிட வேண்டுமெனவும், தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.