ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

நாடாளுமன்றம்: மீனவர்களை விடுவிக்க கோரி தமிழக எம்பிக்கள் போராட்டம்!

நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்பிக்கள் போராட்டம் நடத்தியது பற்றி...

News image
தமிழக எம்பிக்கள் போராட்டம் - PTI
Updated On :7 பிப்ரவரி 2025, 6:29 am

DIN

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்துக்காக தமிழக மீனவர்களை தொடர்ச்சியாக இலங்கை கடற்படையினர் கைது செய்து, அந்நாட்டின் சிறையில் அடைத்து வருகின்றனர்.

இதனிடையே, மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பலமுறை கடிதம் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் தமிழக எம்பிக்கள் வெள்ளிக்கிழமை காலை போராட்டம் நடத்தினர்.

தமிழகத்துக்கு நீதி வேண்டும், தமிழக மீனவர்களையும் படகுகளையும் மீட்க வேண்டும் என்ற பதாகைகளுடன் எம்பிக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு முழக்கமிட்டனர்.

இந்த போராட்டம் குறித்து செய்தியாளர்களுடன் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பேசியதாவது:

“தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து துன்புறுத்துகின்றனர். 97 தமிழக மீனவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த பிரச்னைக்கு தீர்வுகாண வலியுறுத்தி தொடர்ச்சியாக பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதி வருகிறார். நமது மீனவர்களின் 210 படகுகள் இலங்கையில் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. படகுகள் இல்லாமல் மீனவர்களால் எப்படி மீன்பிடிக்கச் செல்ல முடியும்.

மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தப் பிரச்னையை நிரந்தரமாகத் தீர்க்க குழுக்களை அமைப்பதாக உறுதியளித்த மத்திய அரசு, இதுவரை எதுவும் செய்யவில்லை.

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. அவர்களை விடுவிக்க அவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். நீதி நிலைநாட்டப்பட வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி, இதற்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.