
அத்திக்கடவு - அவிநாசி திட்ட பாராட்டு விழாவை நடத்தியது விவசாயிகள் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்ததற்காக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு அத்திக்கடவு-அவிநாசி திட்ட கூட்டமைப்பு, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கும் விழா கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கஞ்சப்பள்ளி பிரிவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு அத்திக்கடவு-அவிநாசி திட்ட கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.எம்.ஆர். நட ராஜ் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அத்திக்கடவு- அவிநாசி திட்ட கூட்டமைப்பு நிர்வாகிகள் வடவள்ளி கணேசன், சாலையூர் நடராஜ், வெள்ளிங்கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எடப்பாடி பழனிசாமிக்கு நடத்திய இந்த பாராட்டு விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதனால் அவர் விழாவை புறக்கணித்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இதற்கு திங்கள்கிழமை விளக்கமளித்த செங்கோட்டையன், அத்திக்கடவு-அவிநாசி திட்டக் குழு நடத்திய பாராட்டு விழாவை புறக்கணிக்கவில்லை.
எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் செங்கோட்டையனின் குற்றச்சாட்டுக்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்துள்ளார். அதில், அத்திக்கடவு திட்டம் நிறைவேறியதற்கு ஜெயலலிதாவும் எடப்பாடி பழனிசாமியும்தான் காரணம்.
பாராட்டு விழாவை நடத்தியது விவசாய கூட்டமைப்பினர்தான், அதிமுகவினர் அல்ல. அதிமுக சார்பில் பாராட்டு விழா நடந்திருந்தால் எம்ஜிஆர், ஜெயலலிதா படங்கள் வைக்கப்பட்டு இருக்கும். பாராட்டு விழாவில் அரசியல் கலக்கக் கூடாது என்பதால் படங்கள் வைக்கப்படவில்லை.
கோகுல் இந்திராவுக்கு ஏதேனும் மனக்குறை இருந்தால் பொதுச் செயலாளரிடம் முறையிடலாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.