சென்னை: அச்சிடப்பட்ட ஆளுநர் உரையில் இடம்பெற்றது மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என அவை முன்னவர் துரைமுருகன் கொண்டுவந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. புத்தாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் தொடங்குவது வழக்கம் என்பதால், ஆளுநர் பேரவைக்கு வந்தார். ஆனால், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதும், ஆளுநர் உரையை வாசிக்காமலேயே அவையிலிருந்து வெளியேறினார்.
இதைத் தொடர்ந்து ஆளுநர் உரையை அப்பாவு வாசித்து முடித்தார். இந்த நிலையில், அச்சிடப்பட்ட ஆளுநர் உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும் என அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அவை முன்னவர், தீர்மானத்தை முன்மொழிந்த நிலையில், குரல் வாக்கெடுப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவை எப்போதும் அதன் மரபை பின்பற்றி வருகிறது என்று அவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார். மேலும், அச்சிடப்படாதவை அவைக் குறிப்பில் இடம்பெறாது எனவும் அவைத் தலைவர் அப்பாவு விளக்கம் கொடுத்துள்ளார்.
இதையும் படிக்க.. எச்எம்பிவி வைரஸ் பாதிப்பு.. மீண்டும் பொதுமுடக்கம் வருமா?
தொடர்ந்து பேசிய துரைமுருகன், தேசிய கீதம் மற்றும் அரசமைப்பு மீது தமிழக அரசு மிகுந்த மரியாதை கொண்டுள்ளது. பேரவையின் புகழை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. ஆண்டின் முதல் கூட்டத் தொடரில் ஆளுநர் உரை நிகழ்த்துவார் என்று சட்டம் உள்ளது. ஆளுநர் பதவி உள்ளவரை மரியாதை கொடுக்க வேண்டும் என்ற கருத்து கொண்டவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி என்று அவையிலிருந்து ஆளுநர் வெளியேறியது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.
2023ஆம் ஆண்டு உரையில் இல்லாத சில பகுதிகளை சேர்த்தும் நீக்கியும் ஆளுநர் உரையாற்றினார். 2024ஆம் ஆண்டிலும் தனது உரையை ஆளுநர் முழுமையாக வாசிக்கவில்லை என்று கூறியுள்ளார் துரைமுருகன்.
ஆளுநர் வெளியேறியது ஏன்?
பேரவையில் முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் ஆர்என் ரவி வலியுறுத்தியிருந்தும், ஆனால் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதால், ஆளுநர் உரையை வாசிக்காமலேயே அவையிலிருந்து வெளியேறியதாக ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.