ஆளுநர் உரை தேவையில்லை என அரசியலமைப்புத் திருத்தம் கோருவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், ஆளுநர் உரையை வாசிக்காமல் ஆர். என். ரவி அவையிலிருந்து வெளியேறினார்.
சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி ஆளுநர் உரையை படித்ததாக, பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
இந்த நிலையில், இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, 'ஆளுநர் உரை தேவையில்லை' என அரசியலமைப்புத் திருத்தம் கோருவோம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார்.
அவருடைய பதிவில், “இந்தியாவில் எதிர்க்கட்சிகள் ஆளும் அனைத்து மாநிலங்களுக்காக, 'ஆளுநர் உரை தேவையில்லை' என அரசியலமைப்புத் திருத்தம் (Constitutional Amendment) கோருவோம்!
அரசு தயாரித்தளித்த அறிக்கையை ஆளுநர் படிக்காமல் வெளியேறுவதால், திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனைகளைப் பயன்பெறும் மக்களிடம் மறைத்துவிட முடியாது.
அரசியலமைப்புக்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சட்டப்பேரவைக்கும் மதிப்பளிக்காமல் மக்கள்நல நடவடிக்கைகளை முடக்கி வைத்து முரண்டு பிடிக்கிறார் தமிழ்நாடு ஆளுநர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டின் தொடக்கத்தில் ஆளுநர் உரை என்ற நடைமுறையை விலக்கிடும் வகையில் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கான முயற்சிகளை இந்தியா முழுவதும் இருக்கும் ஒத்த கருத்துகளைக் கொண்ட அரசியல் கட்சிகள் துணையோடு, இந்திய நாடாளுமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் முன்னெடுக்கும் என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.