பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறியதால் அவரது உரையை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.
தமிழக சட்டப்பேரவை திங்கள்கிழமை (ஜன. 6) கூடியது. புத்தாண்டின் முதல் கூட்டத் தொடா் என்பதால் ஆளுநா் உரையுடன் கூட்டம் தொடங்குவது வழக்கம். இதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று காலை பேரவை மண்டபத்துக்கு வருகை தந்தார்.
அவரை பேரவைத் தலைவா் மு.அப்பாவு வரவேற்றார். தொடர்ந்து சட்டப்பேரவை தொடங்கியதும் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படடது. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் ஆளுநர் ரவி திடீரென அவையில் இருந்து வெளியேறினார்.
இதனால் அவையில் சிறிது பரபரப்பு நிலவியது. பேரவையில் ஆளுநர் ஆங்கிலத்தில் உரையாற்றிய பிறகு, பேரவைத் தலைவர் தமிழில் அந்த உரையை வாசிப்பது வழக்கம். ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமலே வெளியேறியதால் அவரது உரையை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.
அதில், ரூ.10 லட்சம் கோடிக்கு மேலான தனியார் முதலீடுகள் இதுவரை ஈர்க்கப்பட்டுள்ளன. பெரம்பலூர், இராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் முதலீடுகள் கொண்டு வரப்பட்டுள்ளன. மின் வாகனங்களின் மையமாக கோவை, ஓசூர் மாறியுள்ளது. முதலீடுகள் மூலம் சமமான பரவலான வளர்ச்சி கொண்டு வரப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் வேளாண் விளைநிலங்களை பாதுகாத்து பராமரிப்பதற்கு இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு என தனி வரவு செலவு திட்டத்தை அறிமுகப்படுத்தியது, உள்ளிட்ட பல முன்னோடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
முன்னதாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதும், அதிமுக உறுப்பினர்கள் ‘யார் அந்த சார்’ என்ற கோஷம் எழுப்பியதால் அவைக்குள் சலசலப்பு எழுந்தது. இதையடுத்து அதிமுக உறுப்பினர்கள் பதாகைகள் ஏந்தி போராடியதால், அதிமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.