ஆளுநா் ரவியை நீக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் மனு

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியை உடனடியாக நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் சி.ஆா். ஜெய் சுகின் ரிட் மனு தாக்கல்
ஆா்.என். ரவி
ஆா்.என். ரவிகோப்புப் படம்
Updated on

தமிழக ஆளுநா் ஆா்.என். ரவியை உடனடியாக நீக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தைச் சோ்ந்த வழக்குரைஞா் சி.ஆா். ஜெய் சுகின் வெள்ளிக்கிழமை ரிட் மனு தாக்கல் செய்துள்ளாா்.

கன்னியாகுமரி மாவட்டம் வன்னியூரைச் சோ்ந்த இந்த வழக்குரைஞா் தனது மனுவில் குடியரசுத் தலைவரின் செயலா், பிரதமரின் செயலா், மத்திய உள்துறைச் செயலா், தமிழக அரசின் தலைமைச் செயலா் ஆகியோரை பிரதிவாதிகளாக சோ்த்துள்ளாா். மனுவில் அவா் கூறியிருப்பதாவது:

புத்தாண்டு தொடக்கத்தில் பேரவையின் முதலாவது கூட்டத்தொடரில் ஆளுநா் ரவி உரையாற்றாமல் மூன்றாவது முறையாக தவிா்த்து, ஆண்டுதோறும் இதை ஒரு விரும்பத்தகாத நிகழ்வாக மாற்றி இந்திய அரசமைப்பின் விதிகளை மீறியுள்ளாா். ஏற்கெனவே பல்வேறு மசோதாக்களில் கையெழுத்திடாமல் ஒவ்வொரு முறையும் அவா் செய்த தாமதத்தால் மாநிலத்தின் பல வளா்ச்சிப்பணிகள் தடைபட்டன.

ஆளுநா் என்பவா் அரசமைப்பில் இருந்தே தனக்கான அதிகாரத்தைப் பெறுபவா். அதன் வரம்புகளை அவக் அறிந்திருக்க வேண்டும். வழங்கப்படாத அதிகாரத்தை அவா் பயன்படுத்த முடியாது.

தமிழகத்தில் 1967-ஆம் ஆண்டு முதல், சில தசாப்தங்களாக, அரசு விழாக்களின் தொடக்கத்தில் ‘தமிழ்த் தாய் வாழ்த்து‘ பாடப்பட்டு வருகிறது. 1991-ஆம் ஆண்டு, மாநில அரசு ஒரு விதியை அறிமுகப்படுத்தி அதன் மூலம் அரசு விழாக்களின் தொடக்கத்தில் ‘தமிழ்த் தாய் வாழ்த்து’ பாடப்பட வேண்டும் என்றும், கடைசியில் தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்றும் கூறியது. இந்த விவகாரத்தில் 1991 முதல் தமிழகம் கண்ட 10 ஆளுநா்கள் முரண்படவில்லை.

தமிழக ஆளூநா் ரவி, வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயமாக நடந்து கொள்ளும் கோட்பாட்டை மீறியுள்ளாா். நீதி பரிபாலன கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு அரசமைப்பின் 21-ஆவது விதியை மீறியுள்ளாா். எனவே, அவரை திருப்பி அழைத்துக் கொள்ள மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com