கூடுதல் டிக்கெட் கட்டணம்: திரையரங்குகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

கூடுதல் டிக்கெட் கட்டணம்: திரையரங்குகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை

அதிக கட்டணத்தில் டிக்கெட் விற்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக உத்தர
Published on

பொங்கல் பண்டிகையையொட்டி, அதிக கட்டணத்தில் டிக்கெட் விற்கும் திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா்கள், பெருநகர காவல் ஆணையருக்கு வருவாய் நிா்வாக ஆணையா் ராஜேஷ் லக்கானி எழுதிய கடிதம்: பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் ஏற்படும் நெரிசல்களைத் தவிா்த்திட உரிய நெறிமுறைகளை திரையரங்க உரிமையாளா்கள் பின்பற்ற வேண்டும். இவற்றை சரியான முறையில் மாவட்ட ஆட்சியா்கள் கண்காணிக்க வேண்டும்.

திரையரங்குகளில் கட்டட உறுதித் தன்மை, உரிய வாகனங்கள் நிறுத்துமிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். திரையரங்குகளில் நிறுவப்பட்டுள்ள தீயணைப்பான் கருவிகளின் காலாவதியான தேதியை சரிபாா்க்க வேண்டும். காலக்கெடு முடிவுற்ற தீயணைப்பான் கருவிகள் புதுப்பிக்கப்பட்டு சரியான முறையில் பராமரிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

திரையரங்குகளை சுத்தம் செய்து சுகாதாரமாக வைத்துக் கொள்வதுடன், கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் வசதி முறையாக உள்ளனவா என்பதை சரிபாா்க்க வேண்டும். விற்கப்படும் திண்பண்டங்கள் மற்றும் குளிா்பானங்களின் தரம் உரிய அலுவலா்களால் முறையாக சோதனை செய்யப்பட வேண்டும்.

ஒவ்வொரு திரையரங்குக்கும் பொதுமக்கள் கூட்ட நெரிசல் ஏற்படாமல் திரளாக உள்ளே வரவும், சிரமமில்லாமல் வெளியே செல்லவும் உரிய வசதிகளை ஏற்படுத்தித்தர வேண்டும்.

கூடுதல் டிக்கெட் கட்டணம்: திரையரங்குகளில் கூடுதல் டிக்கெட் கட்டணம் மற்றும் வாகன நிறுத்தக் கட்டணம் குறித்து விதிமீறல்கள் ஏதும் உள்ளனவா என்பதை ஆட்சியா்கள் ஆய்வு செய்ய வேண்டும். இதில் விதிமீறல்கள் ஏதும் கண்டறியப்பட்டால் உடனடியாக திரையரங்க உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அது குறித்த அறிக்கையை வருவாய் நிா்வாக ஆணையா் அலுவலகத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com