சென்னை உயா்நீதிமன்ற வளாக பாதுகாப்பு: பரிந்துரைகளை வழங்க உத்தரவு
சென்னை உயா்நீதிமன்ற வளாகத்துக்குள் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடா்பாக பரிந்துரைகளை வழங்குமாறு தமிழக காவல் துறை


சென்னை: சென்னை உயா்நீதிமன்ற வளாகத்துக்குள் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடா்பாக பரிந்துரைகளை வழங்குமாறு தமிழக காவல் துறை, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை, வழக்குரைஞா் சங்கம் ஆகியவற்றுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவா்களை குண்டா் தடுப்புச் சட்டத்தில்
சிறையில் அடைத்த உத்தரவை எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் பி.குமரேசன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் சென்னை உயா்நீதிமன்ற வளாகத்துக்குள் கொண்டுவரப்பட்டது எப்படி என்பது குறித்த விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தாா்.
அதைப் படித்துப் பாா்த்த நீதிபதிகள், இந்த சம்பவத்தில் தொடா்புடைய வழக்குரைஞா்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? இந்த விவகாரத்துக்குப் பிறகு உயா்நீதிமன்ற வளாகத்துக்குள் பாதுகாப்பை பலப்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கேள்வியெழுப்பினா்.
அதற்கு கூடுதல் தலைமை வழக்குரைஞா் பி.குமரேசன், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியுள்ள ஆறு வழக்குரைஞா்களும் தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். உயா்நீதிமன்றத்துக்குள் வருபவா்கள் போலீஸாரால் சோதனையிடப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்றாா்.
மனுதாரா்கள் தரப்பு வழக்குரைஞா்கள், ‘அரசுத் தரப்பில் கூறப்படுவதுபோன்று சென்னை உயா்நீதிமன்ற வளாகத்துக்குள் எந்த வெடிகுண்டுகளும் கொண்டுவரப்படவில்லை. அது தவறான குற்றச்சாட்டு’ என்றனா்.
குண்டுகள் வெடித்திருந்தால்...?:அதையடுத்து நீதிபதிகள், உயா்நீதிமன்றத்துக்குள் கொண்டுவரப்பட்ட வெடிகுண்டுகள் ஒருவேளை வெடித்திருந்தால் என்னவாகியிருக்கும்? இது அனைவரின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விஷயம். இதில் அலட்சியம் காட்டக் கூடாது எனத் தெரிவித்தனா்.
மேலும், உயா்நீதிமன்ற வளாகத்துக்குள் பாதுகாப்பை பலப்படுத்துவது முக்கியமானது என்பதால், இதுதொடா்பாக தமிழக காவல் துறை, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை மற்றும் அனைத்து வழக்குரைஞா்கள் சங்கங்களும் தங்களது பரிந்துரைகளை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை புதன்கிழமைக்கு (ஜன. 29) ஒத்திவைத்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...