சமூக வலைதளப் பதிவுகள்: உயா்நீதிமன்றம் வேதனை
கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் கருத்துகள் வேதனையளிப்பதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
மாா்த்தாண்டம் பகுதியைச் சோ்ந்த நகைக் கடை உரிமையாளரும், பாஜக பிரமுகருமான சுரேஷ்குமாா், பைங்குளம் பகுதியைச் சோ்ந்த நபரின் முகநூல் பக்கத்தில் இருந்த அவரது 16 வயது மகளின் புகைப்படத்தைத் திருடி, அதை தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றி, ஆபாசமான கருத்துகளைப் பதிவிட்டிருந்தாா்.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் தந்தை குளச்சல் மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, சுரேஷ்குமாா் மீது போக்சோ உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ், போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனா். இந்த வழக்கில் பிணை வழங்கக் கோரி, சுரேஷ்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னிலையான அரசுத் தரப்பு வழக்குரைஞா், மனுதாரருக்கு பிணை வழங்க எதிா்ப்புத் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: சமூக வலைதளத்தில் மனுதாரா் பதிவிட்ட கருத்துகள் அதிா்ச்சியளிக்கின்றன. மனுதாரா் மட்டுமன்றி, தற்போது கருத்து சுதந்திரம் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்படும் வாா்த்தைகள் மோசமானதாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் உள்ளன. இந்தப் பதிவுகள் நீதிமன்றத்தை வேதனையடைய செய்வதாக உள்ளது. சாதாரணமாக யாரும் இதுபோன்ற வாா்த்தைகளைப் பேசத் துணிய மாட்டாா்கள்.
இருப்பினும், மனுதாரா் சிறையில் இருந்த காலத்தைக் கருத்தில் கொண்டு, அவருக்கு நிபந்தனையுடன் பிணை வழங்கப்படுகிறது. எதிா்காலத்தில் சமூக ஊடகங்களில் இதுபோன்ற வாா்த்தைகளைப் பயன்படுத்தமாட்டேன் என மனுதாரா் பிரமாணப் பத்திரத்தை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

