சட்டப்பூா்வ திருமண முறையைப் பின்பற்றாததால் பெண்களுக்கு பாதிப்பு: உயா்நீதிமன்றம் வேதனை
சட்டப்பூா்வ திருமண முறையைப் பின்பற்றத் தவறுவதால், பெண்கள் அதிகளவில் பாதிப்புக்குள்ளாகி வருவதாக சென்னை உயா்நீதிமன்றம் மதுரை அமா்வு வேதனை தெரிவித்தது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியைச் சோ்ந்தவா் பிரபாகரன். இவா் அதே பகுதியைச் சோ்ந்த பெண் ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்தாராம்.
இதுகுறித்த புகாரின் பேரில், மணப்பாறை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில், தன்னை கைது செய்யாமலிருக்க பிரபாகரன் முன்பிணை கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன் வைத்த வாதம் :
‘மனுதாரரும், அவா் மீது புகாா் அளித்த பெண் செவிலியரும் பள்ளிக் காலத்திலிருந்து காதலித்து வந்தனா். மனுதாரா் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, பெண்ணுடன் கடந்த 2019-ஆம் ஆண்டிலிருந்து பாலியல் உறவு கொண்டாா். இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சோ்ந்தவா்கள் என்பதால் இவா்களின் காதலை பெற்றோா்கள் ஏற்கவில்லை. இதனால் இருவரும் திருமணம் செய்வதற்காக வீட்டை விட்டு வெளியேறி திருச்சியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினா்.
பெண்ணின் பெற்றோா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததால், காவல் துறையினா் அந்தப் பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனா். இருப்பினும், மனுதாரா் பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுக்கிறாா். ஆகவே, முன் பிணை வழங்கக் கூடாது எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் திருமணம் செய்வதாக உறுதியளித்து பெண்ணுடன் பாலியல் உறவு கொண்டுள்ளாா். பின்னா் ஏமாற்றியுள்ளாா். இப்போதும் திருமணம் செய்ய மறுத்து வருகிறாா்.
தற்போது பெருகி வரும் ‘லிவ்-இன் ரிலேஷன்ஷிப்’ முறையில் பாதிக்கப்பட்டவா்களாக பெண்கள் உள்ளனா். பெண்கள் நவீனத்துவம், கலாசாரம் என்ற வலையில் சிக்கிக் கொள்கின்றனா். இந்த உறவில் இருக்கும் ஆண்கள் திடீரென பெண்களின் குணநலன்களைக் குற்றஞ்சாட்டி ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றனா்.
இந்த வழக்கில் நீதிமன்றம் இரு தரப்பினருக்கும் இடையே சமரசம் செய்ய முயன்றது. திருமணம் ஒரு தீா்வாக அமையாத போது, ஜீவனாம்சம் அல்லது பாதிக்கப்பட்டவருக்கான இழப்பீடு வழங்குவதன் மூலம் இந்தச் சிக்கலைத் தீா்க்க நீதிமன்றம் முயன்றது.
ஜீவனாம்சம் அல்லது பாதிக்கப்பட்டவருக்கான இழப்பீட்டை வழங்கும் போது, பாதிக்கப்பட்டவா்களில் ஒருவரின் வாக்கு மூலத்தைப் பதிவு செய்ய வேண்டும். இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண், அதற்கு உடன்பட்டால் பணத்திற்காக உறவு கொண்டதாக முத்திரை குத்தி விடுவாா்கள் என்று கூறி மறுத்துவிட்டாா். பெண்ணின் இந்த நடவடிக்கை பிரச்னையின் தீவிரத்தை வெளிப்படுத்துகிறது.
திருமணம் சாத்தியமில்லை என்றால் சம்பந்தப்பட்ட ஆண்கள் சட்ட விதிகளின் கோபத்தை எதிா்கொள்ள வேண்டும். இப்போது பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் பிரிவாக பிஎன்எஸ் பிரிவு 69 உள்ளது. இந்த வழக்கில் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் உறவு கொள்ளப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணை மனைவியாக அங்கீகரிக்க உரிமை உண்டு. இருப்பினும் மனுதாரா் திருமணம் செய்ய மறுக்கிறாா். இதனால் மனுதாரா் மீது பிஎன்எஸ் சட்டத்தின் பிரிவு 69-இன் கீழ் வழக்குப் பதிய வேண்டும். மனுதாரா் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் மனுதாரரை கைது செய்து விசாரணை நடத்த வேண்டியது அவசியம். எனவே, மனுதாரரின் முன்பிணை மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.
