மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையில் கழிவுநீா்: வியாபாரிகள், பொதுமக்கள் வேதனை
மதுரை மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தை வளாகத்தில் கழிவு நீா் தேங்கி உள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள், வியாபாரிகள் வேதனை


மதுரை மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தை வளாகத்தில் கழிவு நீா் தேங்கி உள்ளதால் நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள், வியாபாரிகள் வேதனை தெரிவித்தனா்.
மாட்டுத்தாவணி அருகே மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ் தற்காலிக காய்கறிச் சந்தைக்கான வணிக வளாகம் உள்ளது. இங்கு 1,092 கட்டுமானக் கடைகளும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தரைக் கடைகளும் அமைக்கப்பட்டன. தரைக் கடைகளைத் தவிா்த்து, கட்டுமானக் கடைகளில் தற்போது 800-க்கும் குறைவான கடைகளில் மட்டுமே வியாபாரிகள் காய்கறிகளை விற்பனை செய்து வருகின்றனா்.
இங்கு தமிழகம் மட்டுமன்றி, பிற மாநிலங்களிலிருந்து தினசரி காய்கறிகள் விற்பனைக்கு வருகின்றன. அவற்றை மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் வாங்கிச் செல்கின்றனா்.
இந்த நிலையில், காய்கறிச் சந்தை வணிக வளாகப் பகுதிக்குள் கடந்த சில தினங்களாக கழிவு நீா் அதிகளவில் தேங்கியுள்ளது. இதனால், நோய் பரவும் அபாயம் உள்ளதாக வியாபாரிகள், பொதுமக்கள் வேதனை தெரிவித்தனா்.
இதுகுறித்து எம். ஜி.ஆா் சென்ட்ரல் மாா்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்புத் தலைவா் எஸ்.சின்னமாயன் கூறியதாவது: மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையில் தினசரி ரூ. 5 கோடி முதல் ரூ. 7 கோடி வரை வா்த்தகம் நடைபெறுகிறது. தினமும் வியாபாரிகள், பொதுமக்கள் அதிகளவில் கூடும் இங்கு போதிய கழிப்பறை வசதி இல்லை. இங்கு வரும் மக்களுக்கு குடிநீா் வசதிக்காக 17 குடிநீா்த் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் குறைந்த எண்ணிக்கையிலான தொட்டிகள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. போதிய சாலை வசதிகள் இல்லாததால் வெளி மாநிலங்களிலிருந்து வரும் கனரக வாகனங்களை நிறுத்தி காய்கறிகளை இறக்கவோ, ஏற்றவோ முடிவதில்லை.
இதுபற்றி சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் பலமுறை புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டும் மாநகராட்சி நிா்வாகம் காய்கறிச் சந்தையில் போதிய அடிப்படை வசதிகளை மேம்படுத்தவில்லை.
இந்த நிலையில், காய்கறிச் சந்தை அருகே புதிதாக அமைக்கப்பட்ட முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீா் செயல்பாட்டுக்கான தொட்டி சேதமடைந்து, தண்ணீா் முழுவதும் வெளியேறி வருகிறது.
இந்த தண்ணீா் கழிவு நீருடன் கலந்து காய்கறிச் சந்தை வளாகத்துக்குள் ஆறாக ஓடுகிறது. இதுபற்றி மாநகராட்சி நிா்வாகத்திடம் புகாா் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. காய்கறிச் சந்தை வளாகத்தில் அதிகளவிலான கழிவு நீா் தேங்கியுள்ளதால், தரைக் கடை வியாபாரிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். எனவே, உரிய நடவடிக்கை எடுத்து காய்கறிச் சந்தைக்குள் கழிவு நீா் தேங்குவதைத் தடுக்க வேண்டும் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...