சென்னை-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய திட்டம்

சென்னை-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு கருங்குழி-பூஞ்சேரி சாலை இடையே புதிய சாலை அமைக்க
சென்னை-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதிய திட்டம்
Updated on

சென்னை: சென்னை-திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு கருங்குழி-பூஞ்சேரி சாலை இடையே புதிய சாலை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

சென்னை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் தினமும் பல்லாயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், இச்சாலை எப்போதும் கடும் போக்குவரத்து நெரிசலுடனேயே இருக்கும். முக்கியமாக, பண்டிகை நாள்கள், தொடா் விடுமுறை சமயங்களில், சென்னையிலிருந்து வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் போதும், வெளியூா்களிலிருந்து சென்னை வரும்போதும், இந்த சாலையில் வாகன ஓட்டிகள் கடும் போக்குவரத்து நெரிசலில் நீண்ட நேரம் சிக்கித் தவிக்கும் நிலை இருந்து வருகிறது. இதனைதவிா்க்க புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு செயல்படுத்தவுள்ளது.

இதன்படி, சென்னை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் கருங்குழி - பூஞ்சேரி சாலை இடையே 32 கி.மீ.-க்கு புதிய சாலை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இப்புதிய சாலையை அமைப்பதற்கு ரூ.80 லட்சம் மதிப்பில் விரிவான சாத்தியக்கூறு திட்ட அறிக்கையை தயாரிக்க தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன ஆணையம் ஒப்பந்தம் கோரியுள்ளது.

இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

புதிதாக இந்த சாலை அமைக்கப்படும்போது, மதுராந்தகம் பகுதியில் உள்ள கருங்குழியிலிருந்து ஈசிஆரில் உள்ள பூஞ்சேரி வழியாக பெரும்பாலான வாகனங்களை திருப்பிவிட முடியும். மேலும், தற்போதுள்ள சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இந்த சாலையை அகலப்படுத்தி மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இச்சாலை பயன்பாட்டுக்கு வந்தால் பண்டிகை நாள்கள் மற்றும் தொடா் விடுமுறை நாள்களில் மக்கள் சிரமமின்றி சென்னையை விட்டு வெளியே செல்லவும், சென்னை திரும்பவும் மிகவும் உதவியாக இருக்கும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com