
வயநாடு அருகே பெண்ணை அடித்துக்கொன்ற ஆட்கொல்லி புலி, சடலமாக கண்டெடுக்கப்பட்டது.
கேரள மாநிலம், வயநாடு மாவட்டத்தில் உள்ள மானந்தவாடி அருகே கடந்த 24ஆம் தேதி தற்காலிக வனக் கண்காணிப்பாளரின் மனைவி ராதா புலி தாக்கி பலியானார்.
அதைத்தொடர்ந்து ஜனவரி 26ஆம் தேதி வனத்துறையின் அதிகாரி ஒருவரும் புலி தாக்கியதில் காயம் அடைந்தார்.
இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். ஆட்கொல்லி புலியை கொல்ல வேண்டும் எனவும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மக்கள் போராட்டத்தையடுத்து புலியை சுட்டுப்பிடிக்க அம்மாநில வனத்துறை முடிவு செய்து, தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் பெண்ணைக் கொன்ற புலி இறந்துவிட்டதாக திங்கட்கிழமை அம்மாநில வனத்துறை தெரிவித்துள்ளது.
பஞ்சரகொல்லி கிராமத்தில் உள்ள பிரியதர்ஷினி எஸ்டேட் அருகே உள்ள பிலக்காவு வனப்பகுதியில் அதிகாலை 2:30 மணியளவில் புலி இறந்து கிடப்பதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.
இறந்துகிடந்த புலியின் கழுத்தில் ஆழமான காயங்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது. இந்த புலி வேறொரு புலியால் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இருப்பினும் புலி இறப்பிற்கான காரணம் உடற்கூராய்வுக்கு பிறகே தெரியவரும் என்று கேரள வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.