விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல்!

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.1.60 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.60 கோடி பணத்துடன் பிடிபட்ட நான்கு பேர்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.60 கோடி பணத்துடன் பிடிபட்ட நான்கு பேர்.
Published on
Updated on
2 min read

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் நான்கு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்த போது ரூ.1.60 கோடி ஹவாலா பணம் சிக்கியது. இதுதொடர்பாக திருச்சியைச் சேர்ந்த 4 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது .

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலுள்ள புறக்காவல் நிலைய காவல்துறையினர் வியாழக்கிழமை காலை பேருந்து நிலையப் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகத்தின் அடிப்படையில் கையில் பெரிய அளவிலான பையுடன் (டிராவல் பேக்) நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். மேலும், அவர்கள் வைத்திருந்த பையையும் காவல்துறையினர் சோதனையிட்டனர். இதில் ஒவ்வொரு பையிலும் தலா ரூ.40 லட்சம் இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்துக்கு புறக்காவல் நிலைய காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் காவல் ஆய்வாளர் செல்வவிநாயகம் புதிய பேருந்து நிலையத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் அவர்கள் திருச்சி காந்திச்சந்தை அருகிலுள்ள வரகனேரியைச் சேர்ந்த முபாரக் மகன் தாஜ் முகமது (350, ஜாகீர் உசேன் மகன் முகமது ரியாஸ் (30), ராவுத்தர் மகன் சிராஜுதீன் (31), ஜாபர் அலி மகன் அபுபக்கர் சித்திக் (31) எனத் தெரிய வந்தது.

இந்தப் பணத்துக்கான உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததாலும், காவல்துறை விசாரணையின்போது முன்னுக்குப் பின் முரணாகத் தகவல்களைத் தெரிவித்ததாலும், தாஜ் முகமது உள்ளிட்ட 4 பேரையும் தாலுகா காவல் நிலையத்துக்கு காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில் சென்னையிலிருந்து திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட ஹவாலா பணம் எனத் தெரிய வந்தது.

இதையடுத்து சென்னை வருமானவரித்துறை அலுவலர்களுக்கு தாலுகா காவல்துறையினர் தகவல் அளித்தனர். வருமான வரித்துறை அலுவலர்களிடம் நான்கு பேரும் ஒப்படைக்கப்பட்ட நிலையில், ரூ.1.60 கோடி ஹவாலா பணமும் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட பணம்

சென்னை எழும்பூரிலிருந்து புதுச்சேரி வரை செல்லும் பயணிகள் ரயில் மூலம் வியாழக்கிழமை காலை புறப்பட்ட நான்கு பேரும் விழுப்புரம் ரயில் நிலையத்துக்கு வந்து இறங்கியுள்ளனர். அதன் பின்னர் புதிய பேருந்து நிலையப் பகுதிக்கு வந்து உணவகத்தில் காலை உணவு சாப்பிட்ட நான்கு பேரும், பேருந்து மூலம் திருச்சிக்கு கொண்டு செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில், சந்தேகத்தின்அடிப்படையில் காவல்துறையினர் விசாரித்த போது ஹவாலா பணத்துடன் பிடிபட்டுள்ளனர்.

கூலித் தொழிலாளிகள்

விழுப்புரத்தில் காவல்துறையினரிடம் பிடிபட்ட நான்கு பேரும் திருச்சி காந்திச் சந்தையில் காய்கறி விற்பனையகங்களில் கூலித் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்ததும், அவ்வப்போது இதுபோன்று ஹவாலா பணத்தை மாற்றிக் கொடுக்கும் பணியையும் மேற்கொண்டு வந்ததும் போலீஸார் விசாரணையில் தெரிய வந்தது.

இதற்காக ஒவ்வொருவருக்கும் கமிஷன் தொகை வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு நான்கு பேரும் தற்போது விழுப்புரத்தில் போலீஸாரிடம் சிக்கிக் கொண்டுள்ளனர்.

சென்னை பிராட்வே பகுதியில் அடையாளம் தெரியாத நபர் நான்கு பைகளில் கொடுத்த பணத்தை, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் மற்றொரு நபர் வந்து வாங்கிக் கொள்வார் என்றும் கூறியதன் அடிப்படையில், தாங்கள் இந்த பணத்தை வாங்கி வந்ததாக தாஜ் முகமது உள்ளிட்ட 4 பேரும் காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது தெரிவித்துள்ளனர்.

சென்னையில் பணம் கொடுத்த அனுப்பிய நபர், திருச்சியில் பணத்தை வாங்கிச் செல்ல இருந்தவர் யார்? எங்கிருந்து ஹவாலா பணம் அனுப்பப்பட்டது போன்றவை குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை நடத்துவார்கள் எனக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com