
போராட்டம் நியாயமானது என்பதாலே டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து என்று தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட கடந்த ஆண்டு நவம்பா் மாதத் தொடக்கத்தில் ஏலத்தின் மூலம் மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது. பின்னர் இந்த திட்டத்திற்கு தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழக சட்டப்பேரவையில் இதுகுறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் அரிட்டாபட்டி போராட்டக்குழுவினர், மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை தில்லியில் சந்தித்துப் பேசினர். இதையடுத்து டங்ஸ்டன் கனிமச் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியுடன் இன்று அரிட்டாபட்டி சென்றார்.
அங்கு செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை பேசுகையில், “அரிட்டாபட்டி சுற்றுவட்டார பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும். மாநில அரசின் மிரட்டலுக்கு எல்லாம் பிரதமர் மோடி அரசு அஞ்சுவதில்லை. மக்களின் போராட்டம் நியாயமானது என்பதாலே டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அன்பின் இலக்கணமாக இந்த பாராட்டு விழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது இந்தியாவுக்கே ஒரு சான்று. மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி வந்திருக்கும் இந்த நாள் சரித்திரத்தில் இடம்பிடித்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் பிரச்சினை என்றால் மத்திய அரசு ஓடோடிவரும்.
எப்போதும் தமிழகத்திற்கு தோழனாக பிரதமர் மோடி இருப்பார். மண்ணின் மைந்தர்களுக்காக பிரதமர் மோடி இந்தத் திட்டத்தை ரத்து செய்துள்ளார். சட்டப்பேரவையில் தீர்மானம் போட்டதால் டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யவில்லை ” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.