தமிழ்மீது பிரதமருக்கு அதீத அன்பு: மதுரை மக்களிடையே மத்திய அமைச்சர் புகழாரம்!

டங்ஸ்டன் ரத்து: மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் மதுரையில் பாராட்டு விழா
பாராட்டு விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியும், பாஜக தலைவர் அண்ணாமலையும்
பாராட்டு விழாவில் பங்கேற்ற மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியும், பாஜக தலைவர் அண்ணாமலையும்X | K.Annamalai
Published on
Updated on
1 min read

டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதையடுத்து பாராட்டு தெரிவிப்பதற்காக மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கும், பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் மதுரையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

மதுரை மாவட்டம் மேலூர் பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக மதுரை மாவட்ட மக்கள் போராட்டம் நடத்தி வந்ததையடுத்து, டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் கைவிடப்பட்டது. இந்த நிலையில், டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்காக பாராட்டு தெரிவிப்பதற்காக மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டிக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கும் அ.வள்ளாலப்பட்டியில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது.

விழாவின்போது, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பேசியதாவது, ``பிரதமர் மோடி அரசியல்தாண்டி, உண்மையில் தமிழ் மக்கள், தமிழ்ப் பண்பாடு மற்றும் கலாசாரத்தின் மீது அதீத அன்பு கொண்டுள்ளார். உலகம் முழுவதும் தமிழர்களின் பெருமை, கலாசாரம், அவற்றின் சிறப்புகளையும் பிரதமர் மோடி சொல்லி வருகிறார். ஜி20 மாநாட்டில் உலகத் தலைவர்கள் முன்னிலையில், தமிழகத்தின் உத்திரமேரூர் கல்வெட்டு உலகத்தில் ஜனநாயகத்துக்கு முன்மாதிரியாக இருப்பதாக பிரதமர் மோடி கூறினார். நாடாளுமன்றத்தில் தமிழர்களின் செங்கோலை அமைத்ததன்மூலம், தமிழர்களின் கலாசாரம், பெருமைகளை பிரதமர் மோடி உலகத்துக்கு எடுத்துக் காட்டியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளாகவே, தமிழ்ப் பண்பாட்டை காக்க என்ன செய்ய வேண்டுமோ அவற்றையெல்லாம் பிரதமர் மோடி செய்து வருகிறார். ஜல்லிக்கட்டு பிரச்னையின்போதும், பிரதமர் மோடிதான் ஜல்லிக்கட்டைத் திரும்ப கொண்டு வந்தார். திருக்குறள், மணிமேகலை உள்ளிட்ட சங்க இலக்கியங்களை பல மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்து, தமிழின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்துள்ளார்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும்போதெல்லாம், அவர்களை மீட்பதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு, அவர்களை பிரதமர் மோடி மீட்டு வருகிறார். தமிழக மக்களிடையே தேசியம் என்ற கொள்கை வளர்ச்சி பெற்று வருகிறது. இதனிலிருந்து, பிரதமர் மோடியை தமிழக மக்கள் ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்று தெரிவித்தார்.

மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்கு உள்பட்ட அரிட்டாபட்டி, நாயக்கர்பட்டி, வல்லாளபட்டி, தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி, கிடாரிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிப்புக்கு எதிர்த்து, ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர்.

முன்னதாக, மக்களின் போராட்டத்தால் சுரங்கத் திட்டம் ரத்தாகியிருந்தாலும், தங்களின் கூக்குரலாலும் கண்டிப்பாலும்தான் டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக அரசியல் தலைவர்கள் பலரும் கூறுவது வேடிக்கையாக இருப்பதாக சமூக ஊடகங்களில் இணையவாசிகள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com