பெண்களை காரில் துரத்திய சம்பவம்: மாணவர்களுக்கு அரசியல் தொடர்பில்லை- காவல்துறை

பெண்களை காரில் துரத்திய சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு அரசியல் தொடர்பில்லை என காவல்துறை தகவல்.
விடியோ காட்சி
விடியோ காட்சி
Published on
Updated on
1 min read

சென்னை அருகே முட்டுக்காட்டில் காரில் வந்த பெண்களை விரட்டி, மிரட்டிய சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு அரசியல் தொடர்பில்லை என்று காவல்துறை தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

கானத்தூா் பகுதியைச் சோ்ந்த இளம் பெண், கடந்த 25-ஆம் தேதி நள்ளிரவு தனது தோழிகளுடன் மாமல்லபுரம் சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தாா். முட்டுக்காடு பக்கிஹாம் கால்வாய் பாலத்தை தாண்டி அந்தக் காா் சென்றபோது, இரு காா்கள் பின் தொடா்ந்து வந்து வழிமறித்தன. மேலும், காா்களில் வந்த நபா்கள், அப்பெண்களை மிரட்டி தகராறு செய்தனா்.

இதற்கிடையே இளைஞா்கள், பெண்களை விரட்டி, மிரட்டும் விடியோ காட்சி சமூக ஊடகங்களில் பரவி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

சம்பவம் குறித்தும், குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டது எவ்வாறு என்பது குறித்தும் பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் கார்த்திகேயன் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

அவர் பேசுகையில், வழக்கின் முக்கிய நபரான சந்துரு ஏற்கனவே மீது கடத்தல் மற்றும் மோசடி வழக்குகள் உள்ளன. கைது செய்யப்பட்ட எல்லாருமே கல்லூரி மாணவர்கள்தான் என்பதால் அடையாளம் வெளியிடப்படவில்லை. மாணவர்கள் அனைவருமே வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். செங்கல்பட்டில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருபவர்கள்.

சம்பவத்தில் தேடப்பட்டு வரும் சந்துரு 2017ஆம் ஆண்டு கல்லூரியில் படித்தவர். அதன் மூலம் மாணவர்களுடன் நட்பு ஏற்பட்டுள்ளது.

இசிஆர் விவகாரத்தில் ஈடுபட்டவர்களுக்கு, அரசியல் தொடர்பு எதுவும் இல்லை. அனைவருமே மாணவர்கள் மட்டும்தான். சுங்கக் கட்டண சலுகைக்காக கட்சிக் கொடியைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். புகார் அளிக்கப்பட்ட 10 நிமிடங்களில் காவல்துறையினர் வீட்டிற்கே சென்று புகார்தாரர்களிடம் விசாரித்துள்ளனர்.

சம்பவத்தில் ஈடுபட்ட கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஏழு பேர் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே ஒருவர் கைதான நிலையில் தற்போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மூன்று பேரை தேடி வருகிறோம். தனிப்படை அமைத்து குற்றத்தில் ஈடுபட்டவர்கள் தேடப்பட்டு வருகிறார்கள்.

கானத்தூர் பாலம் மீது ஏற்கனவே பாதுகாப்பு அதிகமாகவே இருந்துள்ளது. காவலர்கள் அங்கு வந்து அங்கிருந்தவர்களை புறப்பட்டுச் செல்லுமாறு கூறியிருக்கிறார்கள். புகார் தாரரும் அங்கிருந்துதான் அனுப்பி வைக்கப்படுகிறார். அங்கிருந்து வரும்போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

தற்போது முட்டுக்காடு பகுதியில் மேலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி, கூடுதலாகக் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் நிறுத்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

கிழக்கு கடற்கரைச் சாலையிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை தனிப்படையினா் கைப்பற்றி ஆய்வு செய்தனா்.

இந்நிலையில், சம்பவத்தில் தொடா்புடைய இரு காா்களை போலீஸாா் கிழக்கு தாம்பரத்திலுள்ள ஒரு வீட்டிலிருந்து வியாழக்கிழமை பறிமுதல் செய்தனா். அதேபோல சம்பவத்தில் நேரடி தொடா்புடையதாக, தாம்பரத்தைச் சோ்ந்த ஒரு கல்லூரி மாணவரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்திய நிலையில், அவருடன் வந்தவர்களின் தகவல்களும் கிடைக்கப்பெற்றுள்ளது. இதையடுத்து மேலும் மூவர் கைதான நிலையில், மூவர் தேடப்பட்டு வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.