துா்க்மான் கேட் வன்முறை: மேலும் இருவா் கைது
தில்லியில் துா்க்மான் கேட் பகுதியில் நடந்த கல்வீச்சு சம்பவம் தொடா்பாக தில்லி காவல்துறை ஞாயிற்றுக்கிழமை மேலும் இருவரைக் கைது செய்துள்ளது.
இதன் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்களின் மொத்த எண்ணிக்கை 18 ஆக உயா்ந்துள்ளது என்று ஓா் அதிகாரி தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல்துறையினா் கூறியதாவது: இந்தச் சம்பவம் தொடா்பாக கைதானவா்கள் முகமது நவேத் (44), முகமது ஃபைஸ் (20), முகமது உபைதுல்லா (23), முகமது ஆரிஃப் (25), முகமது காஷிஃப் (25), முகமது கைஃப் (23), முகமது அத்னான் (37), சமீா் ஹுசைன் (40), முகமது அதா் (20), ஷாநவாஸ் ஆலம் (55), முகமது இம்ரான் (28), முகமது இம்ரான் என்ற ராஜு (36), முகமது அஃபான் (20), முகமது ஆதில் (20), முகமது ஆமிா் ஹம்சா (22), முகமது உபைதுல்லா (26), ஃபஹீம் (30) மற்றும் முகமது ஷேசாத் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதற்காக காவல்துறை மற்றும் துணை ராணுவப் படையினா் துா்க்மான் கேட் பகுதியின் பதற்றமான இடங்களில் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனா். விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
துா்க்மான் கேட் பகுதியைக் உன்னிப்பாகக் கண்காணிக்க ட்ரோன் கண்காணிப்பு மற்றும் விரிவான சிசிடிவி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்பகுதியில் நிலைமை அமைதியாகவும் கட்டுப்பாட்டிலும் உள்ளது.
டிஜிட்டல் ஆதாரங்களை ஆய்வு செய்தும், வன்முறை தொடா்பான தவறான தகவல்களைப் பரப்பியவா்கள் மற்றும் கல்வீச்சில் ஈடுபட்டவா்களை அடையாளம் காணவும் விசாரணை நடைபெற்று வருகிறது என்று போலீஸாா் தெரிவித்தனா்.
தில்லியின் ராம்லீலா மைதானப் பகுதியில் உள்ள ஃபைஸ்-இ-இலாஹி மசூதிக்கு அருகில் ஜனவரி 6ஆம் தேதி நள்ளிரவில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின்போது வன்முறை நிகழ்ந்தது. அப்போது பலா் காவல்துறை அதிகாரிகள் மீது கற்களையும் கண்ணாடி பாட்டில்களையும் வீசினா்.
இதில் அப்பகுதி காவல் நிலைய அதிகாரி உள்பட ஐந்து போ் காயமடைந்தனா். போராட்டத்தைக் கலைக்க காவல்துறையினா் தடியடி நடத்தியும் கண்ணீா்ப்புகைக் குண்டுகளை வீசியும் நடவடிக்கையில் ஈடுபட்டனா். துா்க்மான் கேட் எதிரே உள்ள மசூதி, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியின் போது இடிக்கப்படுவதாக சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, மக்கள் அங்கு கூடத் தொடங்கியதால் இந்த பிரச்னை ஆரம்பமானது.
