
காவல் துறை விசாரணையில் பலியான அஜித்குமார் இல்லத்துக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நேரில் சென்று இன்று (ஜூலை 2) ஆறுதல் தெரிவித்தார்.
மேலும், அவர்களுக்கு தவெக சார்பில் ரூ. 2 லட்சம் நிவாரணமாகக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல், தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக உள்ளதாகவும் குடும்பத்தாரிடம் விஜய் தெரிவித்தார்.
முன்னதாக, வீட்டில் இருந்த அஜித்குமார் படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அப்போது, தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
காவல் துறை விசாரணையில் அஜித்குமார் என்ற இளைஞர் பலியான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரின் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் தவெக தலைவர் விஜய்யும் அஜித்குமார் இல்லத்திற்குச் சென்று இன்று ஆறுதல் கூறினார்.
காவல் துறையின் இத்தகைய கொடூரமான நடவடிக்கையை கண்டித்து தவெக சார்பில் வரும் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளதாக அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
சிபிஐ விசாரணை
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் கோயிலுக்கு வந்த பக்தரின் நகை காணாமல் போன விவகாரத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜத்குமார் காவல் துறையினரின் விசாரணையின்போது பலியானார்.
ஆனால், அஜித் குமார் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இச்சம்பவம் குறித்து விடியோ வெளியான நிலையில், 5 காவலர்கள் கைது செய்யப்பட்டு, 15 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் உடனடியாக விசாரணை நடத்தி நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என தமிழநாடு முழுவதும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், சிபிஐ விசாரணைக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிக்க | அங்கீகரிக்கப்படாத தனிப்படைகள் கலைப்பு: டிஜிபி
TVK leader Vijay personally visited the house of Ajith Kumar, who died during the police investigation, and offered his condolences.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.