
மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் காவல் மரண வழக்கில் மதுரை மாவட்ட நீதிபதி தனது விசாரணை அறிக்கையை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று தாக்கல் செய்தார்.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார், காவல்துறை விசாரணையில் மரணமடைந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பான வழக்கை சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு விசாரித்து வரும் நிலையில் இந்த வழக்கு தொடர்பாக விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய மதுரை மாவட்ட நீதிபதிக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், கடந்த ஜூலை 2-ம் தேதி முதல் விசாரணை மேற்கொண்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.
மேலும் அஜித்குமார் கொலை தொடர்பான பல்வேறு வழக்குகள் இன்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்த நிலையில், அஜித்குமார் மரண வழக்கை நீதிமன்றம் கண்காணிக்கும் எனவும் மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில் மீதி விசாரணையை சிபிஐ மேற்கொள்ளும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
நீதிமன்ற பதிவாளர் வழக்கு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் சிபிஐ அதிகாரிகளிடம் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.