சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு
சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கோப்புப் படம்

இட பிரச்னை விவகாரம்: போலீஸாருக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

இட பிரச்னை தொடா்பான வழக்கில், காவல் துறை தரப்பில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்? என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு கேள்வி
Published on

இட பிரச்னை தொடா்பான வழக்கில், காவல் துறை தரப்பில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்? என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை கேள்வி எழுப்பியது.

கன்னியாகுமரியைச் சோ்ந்த எஸ். மொராரி, உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: கன்னியாகுமரி மாவட்டம், தெற்கு தாமரைக்குளம் காவல் நிலையத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு ஒரு இட பிரச்னை சம்பந்தமாக எனக்கும், அதே பகுதியைச் சோ்ந்த பெண்ணுக்கும் தகராறு ஏற்பட்டது. இதுதொடா்பான புகாரில் என் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை கடந்த 2023-ஆம் ஆண்டு முடிக்கப்பட்டது. ஆனால், காவல் துறை தரப்பில் இதுவரை விசாரணை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.

இதுகுறித்து கேட்டதன் பேரில், விசாரணை நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தபோது, அதில் முரண்பாடு இருந்ததால் திருப்பி அனுப்பியது தெரியவந்தது. இந்த நிலையில், அதை சரி செய்து தாமரைக்குளம் காவல் நிலைய போலீஸாா் இதுவரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. போலீஸாரின் இந்தச் செயல் சட்ட விரோதமானது. எனவே, என் மீதான குற்றப் பத்திரிகையை நாகா்கோவில் விசாரணை நீதிமன்றத்தில் விரைந்து தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என அதில் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா்கள் ராஜகுரு, விஜயலட்சுமி ஆகியோா் முன்னிலையாகி முன் வைத்த வாதம்:

விசாரணை நீதிமன்றத்தில் கடந்த 2023-ஆம் ஆண்டு இந்த வழக்கு விசாரணை முடிக்கப்பட்டது. ஆனால், காவல் துறை தரப்பில் இதுவரை அங்கு குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவில்லை. விரைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றனா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஒரு வழக்கில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமல் இருப்பது ஏன்? குற்றப் பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் தவறு செய்த காவலா்கள் மீது கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

X
Dinamani
www.dinamani.com