வேகமாகக் கடுமையாகிக் கொண்டிருக்கும் கோடை…
கூடுதலாகத் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் சூடு...
மாநிலத்தைத் தற்போது தழுவி நிற்கும் அதிசூடான சூழலில், மக்கள் மனதில் மேற்காசியப் போர், இங்கே சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு போன்ற விஷயங்களையும் கடந்து சட்டப்பேரவைத் தேர்தல்கள் பற்றிய வெளிக்குரல்களும் உள்சிந்தனைகளும் குடைவிரித்து நிற்பது இயற்கைதானே?
ஆகவே, தமிழகத் தேர்தல்கள் பற்றிய செய்திகளையே இங்கே பார்க்கலாம்...
ஆங்கிலேயர் பிடியிலிருந்து விடுதலைப் பெற்று (1947) குடியரசாகிய (1950) நம் நாட்டில் அக்டோபர் 1951 முதல் நடைபெற்று வரும் தேர்தல்கள், இந்தியக் குடிமக்களாகிய நாம் நமக்கென வகுத்தமைத்து வைத்துக் கொண்டுள்ள அரசமைப்புச் சட்டத்தின்படி (Constitution of India, 1950), ‘தகுவயதடைந்தவர்’ அனைவருக்குமான வாக்குரிமை (Universal Adult suffrage) எனும் அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. அ.ச. பிரிவு 326இன் வழங்கலின்படி, இந்தியக் குடிமக்களுக்கு உரித்தாக்கப்பட்டுள்ள வாக்களிக்கும் உரிமைப் பேறு, 1968 ஆம் ஆண்டு அரசமைப்புத் திருத்தச் சட்டம் 61ன்படி, வாக்களிக்கத் தகு வயது 18 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியக் குடிமகன் அல்லாதவர் எவரும் தேர்தலில் வாக்களிக்கவோ, போட்டியிடும் வேட்பாளராக இருக்கவோ முடியாது. அ.ச. பிரிவு 84 (ஆ) இன்படி மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வயது 25க்குக் குறையாதவராகவும்; சட்டமன்றப் பேரவை வேட்பாளருக்கு அதே வயதுத் தகுதி (25 வயதுக்குக் குறையாதவர்) என அ.ச. பிரிவு 173 (ஆ) இன் படியும் வகுக்கப்பட்டுள்ளது.
வேட்பாளர்களுக்கான மேற்கண்ட அடிப்படைத் தகுதிகளை நமது அரசியலமைப்புச் சட்டம் வகுத்துள்ளதுபோல, தமிழகத்தில் மன்னராட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்திலேயே - சுமார் 1225 ஆண்டுகளுக்கு முன்பே - வேட்பாளர் தகுதி விதிகள், நிபந்தனைகள் வகுக்கப்பட்டிருந்த வரலாறு தமிழர்களுக்கு இருந்திருக்கிறது.
இதோ:
கல்வித் தகுதி: சபையில் உறுப்பினராக விரும்புவோர் தர்ம நூல்களில் ஒன்றை (மந்திர பிராமணம்) முழுமையாக அறிந்திருக்க வேண்டும்.
கல்வித் தகுதி கொண்டிருப்பது மட்டுமல்ல, முறையாக வருமானம் ஈட்டி, அரசுக்குத் தவறாது தண்டல் (வரி) செலுத்துபவராகவும் இருக்க வேண்டும்.
வயதுத் தகுதி : வேட்பாளர்கள் 35 முதல் 70 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சொத்துரிமை: வேட்பாளர் அந்த ஊரில் சொந்த நிலம் வைத்திருப்பவராக இருக்க வேண்டும். வேட்பாளர்களிடம் குறைந்தது அரை வேலி நிலமாவது இருக்க வேண்டும். மேலும், சொந்த மனையில் குடியிருப்பவர்களாகவும் இருக்க வேண்டும்
நன்னடத்தை: மேலான நல்லொழுக்கம் கொண்டவர்களாகவும், நல்ல குணம் படைத்தவராகவும் ஒழுக்கக் கேடான எந்தச் செயல்களிலும் இதற்கு முன் ஈடுபடாத நேர்மையானவராகவும் இருத்தல் அவசியம்.
தகுதி இல்லாதவர்கள்
லஞ்சம், பரிசு அல்லது வரதட்சிணை வாங்கிய குற்றம் ஏதும் செய்திருக்கக் கூடாது.
கடந்த ஐந்தாண்டுகளில் எந்த பொதுநலப் (அரசு) பணியிலும் இருந்திருக் கூடாது. (அதாவது, போட்டியிடும் ஆண்டுக்கு முன்பான ஐந்தாண்டுகளில், எந்தப் பொது, அரசுப் பணியிலும் இருந்திருக்கக் கூடாது. )
பொதுப்பணியைச் செய்து முடித்து கணக்குக் காட்டாதவர்கள்.
மோசமான குற்றங்களில் ஈடுபட்டவர்கள்.
திருடிய வழக்கில் தண்டனை பெற்றவர்கள்.
மேலும், மேற்கண்ட குற்றங்களைச் செய்து பின்னாளில் நல்லவர்களாக வாழ்பவர்களும் மற்றும்
அந்தக் குற்றங்களில் முன்பு ஈடுபட்டவர்களின் தாய் மற்றும் தந்தைவழிச் சொந்தங்களும்கூட சபைத் தேர்தல்களில் பங்கு கொள்ள முடியாது.
சபைக் கூட்டங்களில் அடிக்கடி இடையூறு செய்பவர்களுக்கும் அவ்வாறு தடை செய்பவர்களுக்கு உடந்தையாக இருப்பவர்களுக்கும் தலா ஐந்து பொற்காசு அபராதம் விதிக்கப்படும், அதன் பிறகும் அவ்வாறான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டால் நிபந்தனைகள் (கச்சம்) கடுமையாகக் கடைப்பிடிக்கப்படும்.
இவைபோக,
ஒரு குடும்பத்தில் ஒருநபர் மட்டுமே சபைகளில் பிரதிநிதித்துவப்படுத்தப்படலாம் (ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சபைகளில் இடம் பெற முடியாது.)
தேர்தலில் ஒருவர் ஒரே ஒரு முறை மட்டும்தான் போட்டியிட வாய்ப்பு ( இது எப்படியிருக்கு?)
ஒருவருக்கு ஐந்தாண்டுகள் மட்டும்தான் பணி (Tenure). (ஒவ்வொரு ஊரிலும் தகுதியுள்ள அனைவருக்கும் வாய்ப்புக் கிடைக்கச் செய்யும் நோக்கில் இந்த நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கலாம்).
இத்தகைய கடுமையான வேட்பாளர் தகுதிகளும், நிபந்தனைகளும் தமிழகத்தில் சுமார் 1225 ஆண்டுகளுக்கு முன், ஊர்ச்சபைத் தேர்தல்களில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான தகுதிகளாக நிர்ணயிக்கப்பட்டிருந்ததாகப் பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்து, கி.பி. 800-ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு கூறுகிறது. இக்கல்வெட்டு திருநெல்வேலி மாவட்டம், மானூர் அம்பலவாண சுவாமி கோயில் தூணில் உள்ளது.
மேற்கண்ட வேட்பாளர் தகுதிகளை, கடந்த 2021 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் குறித்த தகவல்களோடு ஒப்பிட்டுப் பார்க்கலாமா?
2021 தேர்தலில் போட்டியிட்ட மொத்த வேட்பாளர்கள் 3,859 பேரில், வேட்பாளர்களே உறுதியளித்துத் தேர்தல் ஆணையத்திற்குச் பிரமாணப் பத்திரமாகச் சமர்ப்பித்துள்ள தன்விவரங்களின்படி, கிரிமினல் வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்கள் 580 பேர் (15%); கடுமையான கிரிமினல் வழக்குகள் உள்ளதாகக் கூறியுள்ள வேட்பாளர்கள் 276 பேர் (7%). இவர்களில், கிரிமினல் வழக்குகள் கொண்ட 134 பேர் (60%) மற்றும் கடுமையான குற்றவியல் வழக்குகள் உள்ளோரில் 58 பேர் (26%) வெற்றி பெற்று மக்கள் பிரதிநிதிகளாகப் பணியாற்றினர் என்பது தற்கால அவலம்.
2026 தேர்தல்களுக்கான வேட்புமனு தாக்கல் செய்வது இன்னும் முடிவுறவில்லை என்பதால், இதுவரை வேட்புமனு தாக்கல் செய்துள்ளவர்கள் குறித்த குற்றப் பின்னணி விவரங்களை வைத்துப் பார்க்கும்போதே, 2026 வேட்பாளர்களின் குற்றப் பின்னணி எண்ணிக்கையும் விகிதமும் 2021 விவரங்களுக்குச் சற்றும் குறைந்திருக்கப் போவதில்லை என்பது உறுதியாகிறது.
இத்தகைய சமீபத்து வேட்பாளர்கள் தகுதிகளைக் (?!) காணும்போது, நமது பிரதிநிதிகளாகப் போட்டியிடுபவர்களது தகுதிகள் ‘1225 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில், இருந்ததுபோலவே இன்றும் அப்படியே இருந்தால் எப்படி இருக்கும்?’ என்று நம்மை எண்ணிப் பார்க்க வைக்கிறதல்லவா?
இதற்கிடையில், வேட்பாளர்களின் சொத்து விவரங்கள், அவர்களது குற்றப் பின்னணி குறித்த விவரங்களை வாக்காளர்கள் தேர்தலுக்கு முன்பே அறிந்துகொள்ள உதவுகிற- வேட்பாளர்கள் பிரமாணப் பத்திர வாக்குமூலம் தாக்கல் செய்யும் - நிலை எவ்வாறு கிடைத்தது என்பது குறித்துச் சுருக்கமாகத் தெரிந்து கொள்வோமே.
வேட்பாளர்களது குற்றப் பின்னணி மற்றும் பதவிகளுக்கு வருமுன் அவர்களுடைய சொத்து விவரங்கள் என்ன என்பதை வாக்காளர்கள் அறிந்திருக்க உரிமையுள்ளது என்ற கருத்து கடந்த 20-25 ஆண்டுகளுக்கு முன்புதான் தோன்றி, வலுப்பெற ஆரம்பித்தது.
1999 ஆம் ஆண்டு நாடாளுமன்ற, மாநில சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யும்போது, தங்கள் மீது/ தங்கள் பெயரில் நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகளை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று ஜனநாயக சீர்திருத்தங்களின் சங்கம் (ADR) வலியுறுத்தி வந்தது.
இதுதொடர்பாக, அச்சங்கம் (ஏ.டி.ஆர்.) தில்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்தது. தில்லி உயர் நீதிமன்றம் இந்த வழக்கில், நவம்பர் 2000 இல், மனுவில் வேண்டியபடி, சாதகமான தீர்ப்பை வழங்கியது.
“எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. பதவிகளுக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் மீது நிலுவையில் உள்ள கிரிமினல் வழக்குகள் குறித்த விவரங்களைச் சத்தியப் பிரமாணப் பத்திரத்தில் அறிவிக்க வேண்டும்” என்பதே அத்தீர்ப்பின் சாரம்.
உடனே, இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு எஸ்.எல்.பி. (சிறப்பு விடுப்பு மனு) தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றம், மத்திய அரசின் கோரிக்கையை தள்ளுபடி செய்து மே 2002 இல், “வேட்பாளர்கள் தங்கள் குற்றப் பின்னணியை வெளிப்படுத்திப் பிரமாணப் பத்திரங்களைத் தாக்கல் செய்வதை ‘வாக்காளரின் உரிமை’ என்று நிறுவி, தில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
மேலும், தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு வேட்பாளரிடமிருந்தும் வேட்பு மனுவின் அவசியமான பகுதியாக பிரமாணப் பத்திரத்தில், வேட்பாளர் கடந்த காலத்தில் ஏதேனும் கிரிமினல் குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டாரா அல்லது விடுவிக்கப்பட்டாரா - வேட்பாளர் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய எந்தவொரு குற்றத்திலும் குற்றம் சாட்டப்பட்டாரா என்பது குறித்த தகவல்களைக் கோருமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைத் தொடர்ந்து, மேற்கூறப்பட்ட விவரங்களைக் கொண்ட பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்யத் தவறினால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (ஆர்.பி. சட்டம்) பிரிவு 33 (1) இன் அர்த்தத்திற்கு உட்பட்டு ‘வேட்புமனு முழுமையடையாது’ என்றும், வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் தேர்தல் ஆணையம் உத்தரவுகளைப் பிறப்பித்தது.
இவ்வளவுக்குப் பின்னும் விடவில்லையே மத்திய அரசு! வேட்பாளர்களின் குற்றப் பின்புலம் வெளியில், வாக்காளர்களுக்குத் தெரியக் கூடாது என்பதில் ஆளுங்கட்சி மட்டுமல்ல, பல அரசியல் கட்சிகளுமே முனைப்பாக நின்றன. ஆகவே, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நீர்த்துப்போகுமாறு மக்கள் பிரதிநிதித்துவ (ஆர்.பி.) சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, ஆர்.பி. சட்டத்தில் பிரிவு 33ஏ மற்றும் 33பி ஆகியவை சேர்க்கப்பட்டன. புதிதாகச் சேர்க்கப்பட்ட பிரிவுகளின்படி, வேட்பாளர்கள் தங்கள் குற்றப் பின்புலம் தொடர்பான எந்த தகவலையும் வெளிப்படுத்த வேண்டியதில்லை என்பது சட்டமானது (எத்தகைய ஜனநாயகம்!)
சிவில் உரிமைகளுக்கான மக்கள் சங்கம் (பி.யூ.சி.எல்.) எதிர் இந்திய ஒன்றியம் (2003) வழக்கு மூலம் முன்சொன்ன திருத்தங்கள் சவாலுக்குள்ளாக்கப்பட்டன. “வேட்பாளர்களது குற்றப் பின்புலம் குறித்த தகவல்களை வெளிப்படுத்துவதை முழுமையாகத் தவிர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட திருத்தச் சட்டப் பிரிவு 33பி அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது என்று கூறி உச்ச நீதிமன்றம் அத்திருத்தங்களை அடியோடு ரத்து செய்தது.
இந்த தீர்ப்பைத் தொடர்ந்துதான், தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள், ‘நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுக்கப்பட்டு நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகள், அவர்களின் சொத்து விவரங்கள், மனைவியின் சொத்து விவரங்கள், தனது கல்வித் தகுதிகள் தொடர்பான முழுமையான தகவல்களை வழங்க வேண்டும் என்பது உறுதியாகித் தற்போதும் தொடர்கிறது. (இல்லாவிட்டால், வேட்பாளர்களது வண்டவாளங்கள் வாக்காளர்களுக்குத் தெரியாத மூடுமந்திரமாகவே போய்விட்டிருக்கும்).
இத்தகைய சூழலில், 1225 ஆண்டுகளுக்கு முன்பே வேட்பாளர்களாக விரும்புவோரின் தகுதிகளை, தகுதியின்மைகளைப் பொதுமக்கள் அனைவரும் நிரந்தரமாக அறிந்துகொள்ளும் வகையில் கல்வெட்டுகளாகவே பொறித்துவைத்து நடத்தப் பெற்ற பழந்தமிழக ஊர்ச்சபைத் தேர்தல் முறை நம்மிடையே வழக்கத்தில் இருந்தது என்பதை அறிந்துள்ளோம்.
பழந்தமிழகத் தேர்தல் முறை என்றாலே பலருக்கும் உத்திரமேரூர்க் கல்வெட்டும் (கி.பி. 920), சோழர்களின் குடவோலை முறையும்தானே வழக்கமாக நினைவுக்கு வரும்? ஆனால் அதிகம் அறியப்பட்டுள்ள உத்திரமேரூர்க் கல்வெட்டு கூறும் குடவோலை முறைக்கு முன்பே - காலத்தால், சுமார் 150 முதல் 200 ஆண்டுகளுக்கு முந்தைய – தேர்தல் முறை, வேட்பாளர் தகுதிகள் முதலியன நடைமுறையில் இருந்த வரலாறு, நெல்லை மாவட்டம் மானூர்க் கல்வெட்டு (கி.பி. 800) மூலம் அறியப்படுகிறது. இந்த ஊர், அக்காலத்தில், 'மானநிலை நல்லுார்' என்று அழைக்கப்பட்டதென அறிகிறோம்.
உத்திரமேரூர், மானூர், இரண்டு கல்வெட்டுகளும் கிட்டத்தட்ட ஒரு எட்டாண்டுகளுக்குள்ளான இடைவெளியில் இந்தியத் தொல்லியல் துறையால் கண்டுபிடிக்கப்பட்டவையே. உத்திரமேரூர் திருமால் கோயிலின் சுவரில் பொறிக்கப்பட்டுள்ள தமிழ் எழுத்துக் கல்வெட்டு முதலில், 1898 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. மானூர் சிவாலயத்தில் உள்ள ஒரு தூணில் காணப்படும் வட்டெழுத்துக் கல்வெட்டு, இந்தியத் தொல்லியல் துறையால் 1906 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
குடவோலை முறை பற்றிப் பேசும் உத்திரமேரூரின் இரண்டு கல்வெட்டுகளில், முதல் கல்வெட்டு 12 வரிகளைக் கொண்டது; இரண்டாம் கல்வெட்டில் 18 வரிகள் உள்ளன. மானூர்க் கல்வெட்டு ஆலயத் தூணில், சுமார் 7'x 1' 2" அளவு கொண்டது; சம நீளம் கொண்ட 64 வரிகளைக் கொண்டுள்ளது. “இது ‘முழுமையடையவில்லை, அதன் முடிவில் சில வார்த்தைகள் தேவைப்படுகின்றன” என்கிறார் கே.ஏ. நீலகண்ட சாஸ்திரி.
ஆனாலும், உத்திரமேரூர்க் கல்வெட்டு அதிகம் அறியப்பட்டுள்ளதாகவும் காலத்தால் முந்தைய மானூர்க் கல்வெட்டு அந்த அளவுக்குப் பெரிதாக அறியப்படாததாகவும் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. ஒருவேளை, உத்திரமேரூர்க் கல்வெட்டு எளிதில் யாரும் படிக்கும் வகையில் ‘தமிழ் எழுத்து வடிவிலும்’, மானூர்க் கல்வெட்டு வட்டெழுத்தை அறிந்த கல்வெட்டு அறிஞர்களைப் போன்றவர்கள் மட்டுமே படித்தறிந்து புரிந்து கொள்ளக்கூடிய ‘வட்டெழுத்து வடிவில்’ இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாமோ என எண்ணத் தோன்றுகிறது.
மானூர்க் கல்வெட்டு கண்டுபிடிக்கப்படுவதற்கு எட்டாண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட உத்திரமேரூர் கல்வெட்டுச் செய்திகள், தமிழர் தேர்தல் முறைகள் குறித்த புதுமையான செய்திகளை முதன்முதலாக வெளிப்படுத்தியதால், பல கல்வெட்டு ஆய்வாளர்கள் மூலமாகவும், பல நூல்களின் வாயிலாகவும், பழங்காலத் தமிழர் தேர்தல் முறைகள் குறித்த பல கருத்தரங்கங்கள், கட்டுரைகள் மூலமாகவும் வேகமாகப் பரவிப் பிரபலமடைந்துவிட்டது.
மேலும், உத்திரமேரூர், மாநிலத் தலைநகரான சென்னைக்கு அருகே அமைந்திருப்பதாலும், இதன் எழுத்து வடிவம் கிட்டத்தட்ட தற்காலத் தமிழில் இருப்பதாலும் உத்திரமேரூர்க் கல்வெட்டு விரைவில் பெயர்பெற்றுவிட்டது என்ற கருத்து, கல்வெட்டு ஆய்வாளர்களிடையே நிலவுகிறது.
அதேநேரம், தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி XIV இல் 37 ஆம் எண் என்றும், கல்வெட்டு இண்டிகா தொகுதி XXII இல் பக்கம் 5இல் பதிவு செய்யப்பட்டுள்ள மானூர்க் கல்வெட்டு, தென் தமிழகத்தில் ஒரு சிற்றூரில் இருப்பதாலும், இந்த வட்டெழுத்துக் கல்வெட்டை சாதாரண மக்கள் எளிதில் படித்துப் புரிந்துகொள்ள முடியாததாலும், அதிக நூல்கள், கட்டுரைகள் இந்தக் கல்வெட்டைப் பற்றி இன்னும் வெளிவரவில்லை என்பதாலும் இந்த கல்வெட்டின் பெருமையும் உத்திரமேரூர் கல்வெட்டிற்கு 125 ஆண்டுகள் மூத்தது என்ற உண்மையும் அதிகம் வெளியுலகிற்குத் தெரியாமல் உள்ளது என்பது பொதுக் கருத்து.
மன்னராட்சியே நிலவிய சோழர் காலத்திலும் (உத்திரமேரூர்) பாண்டியர் ஆட்சிக் காலத்திலும் (மானூர்) நன்கு வரையறுக்கப்பட்டு வெளிப்படையாக அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர் தகுதி விவரங்களோடும் நாட்டின் அடிப்படை அலகான (Unit) கிராம சபைகளில் முறைப்படுத்தப்பட்ட தேர்தல்கள் நடைபெற்றுள்ளன என்றறிய நமக்குப் பெருமிதம் கூடுகிறது.
இவ்வகையான முறைப்படுத்தப்பட்ட கிராமசபைத் தேர்தல்கள், உத்திரமேரூர், மானூர் ஆகிய இரு ஊர்களில் மட்டுமல்ல; சோழர் காலத்திலும், அதற்கு நூறாண்டுகளுக்கு மேல் முன்னுள்ள காலத்தில் பாண்டியர் ஆட்சிப் பகுதியிலும் நடைபெற்ற தேர்தல்கள் தமிழகம் முழுவதிலுமே முறைப்படுத்தப்பட்டுத் தொடர்ந்து நடைபெற்றிருக்கும் என உறுதியாக நம்புவதற்கு நியாயமான காரணங்கள் நிறைய உள்ளன.
பின்வருங்காலங்களில் இதனை உறுதிப்படுத்தப் போதிய ஆதாரங்கள் – கீழடி போலக் கிளம்பி வெளிவரலாம் விரைவில்.
‘வேட்பாளர் தகுதிகள், தேர்தல் நிபந்தனைகள் முதலியவை அன்றுபோல் இன்றும் இருந்தால் எப்படியிருக்கும்?’ எனும் நினைவுகளை அசைபோட்டுக் காத்திருப்போம்.
[கட்டுரையாளர் - கல்லூரி, பல்கலைக்கழகப் பணி நிறைவுக்குப் பின் உயர் நீதிமன்ற வழக்குரைஞர்]
Summary
Election Candidate: What were Qualifications for candidates contestion an election 1,225 years ago?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை?

தவெக வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் ஒத்திவைப்பு?

பேரவைத் தேர்தல்கள்: இணையவழியில் வேட்புமனு தாக்கல் செய்ய கூடுதல் வசதி
காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக் வேட்புமனு தாக்கல்!
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு


