கோயில் பணத்தில் கல்லூரிகள் கட்டுவது சதிச்செயல்: எடப்பாடி பழனிசாமி

அறநிலையத் துறை பணத்தை எடுத்து திமுக அரசு கல்லூரிகள் கட்டுவதை சதிச்செயலாக பார்க்கிறோம் என எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
பிரசார சுற்றுப் பயணத்தில் எடப்பாடி பழனிசாமி
பிரசார சுற்றுப் பயணத்தில் எடப்பாடி பழனிசாமி
Published on
Updated on
2 min read

ஆளும் திமுக அரசு அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகள் கட்டுவதை சதிச்செயலாக பார்க்கிறோம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2026 தேர்தல் பிரசார பயணத்தைத் தொடங்கிய எடப்பாடி பழனிசாமி, இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) கோவை மாநகரப் பகுதிகளில் பயணம் மேற்கொண்டார்.

வடவள்ளி பேருந்து நிலையத்தில் உரையாற்றி பயணத்தைத் தொடங்கிய அவர், லாலி ரோடு, சாய்பாபா கோயில், வடகோவை, பூமார்க்கெட், மரக்கடை, கோனியம்மன் கோயில், திருச்சி சாலை, சுங்கம், புலியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசார பயணத்தின்போது அவர் பேசியது:

கடந்த அதிமுக ஆட்சியை இருண்ட ஆட்சி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகிறார். கண்களை மூடிக்கொண்டு பார்த்தால் இருட்டாகத்தான் தெரியும். அதிமுக ஆட்சி தனது 10 ஆண்டுகளில் கோவைக்கு அதிகப்படியான திட்டங்களைக் கொடுத்திருக்கிறது. அதற்கு பாலங்களே சாட்சி.

மக்கள் விரும்பிய இடங்களில் நாங்கள் பாலம் கட்டினோம், முதல்வர் அவற்றுக்கு திறப்பு விழா செய்கிறார். தற்போது மக்கள் பயன்பாட்டில் உள்ள பெரும்பாலான திட்டங்கள் அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டவை. திட்டங்களை நாங்கள்தான் கொண்டு வர முடியும், திமுகவால் திறப்பு விழா மட்டுமே செய்ய முடியும்.

திமுக கூட்டணி பலமாக இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அவர் கூட்டணியை நம்புகிறார்; நாங்களோ மக்களை நம்பியிருக்கிறோம். திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாட்டில் இருக்கிறதா? இல்லையா? என்று தெரியாத அளவுக்கு தேய்ந்து வருகிறது. அக்கட்சியின் முத்தரசன் மு.க.ஸ்டாலினுக்கு அடிமையாக இருக்கிறார். தமிழகத்தை மீட்போம் என்றால் எப்படி மீட்பீர்கள் என்று கேட்கிறார். நாங்கள் தேர்தல் மூலமாகத்தான் தமிழகத்தை மீட்போம்.

முத்தரசனின் கட்சியைப் போல எங்கள் கட்சி இல்லை, எங்களிடம் பிரச்னை என்ற பேச்சுக்கே இடமில்லை. திமுக கூட்டணியில்தான் பிரச்னை உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தலைவர் சண்முகம் தற்போது திமுகவைத் தாக்கி அடிக்கடி பேசுகிறார். மக்கள் பிரச்னையை திமுக தீர்க்கவில்லை என்கிறார். இப்படியே போனால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்கிறார்.

4 ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கட்சி மக்களைப் பற்றி சிந்திப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் அந்தக் கட்சியில் உள்ள மற்ற தலைவர்கள் திமுகவுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துவிட்டனர்.

அதேபோல் அதிமுக - பாஜக கூட்டணி இணக்கமாக இல்லை என்று திருமாவளவன் கூறுகிறார். அவர் எப்படிக் கண்டுபிடித்தார் என்று தெரியவில்லை. கூட்டணி ஆட்சிதான் எங்களது கொள்கை என்கிறார். அப்படியானால் திருமாவளவன் உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுகிறார். எனவே திமுக கூட்டணியில்தான் குழப்பம் உள்ளது. அதிமுக கூட்டணியில் அப்படி இல்லை.

தமிழ்நாட்டுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்தார். நான் அவரைச் சந்தித்தேன். எங்களது தலைவர்களும் பாஜக தலைவர்களும் பேசினோம். இதைத் தொடர்ந்து அமித் ஷா செய்தியாளர்களிடம் பேசும்போது, அதிமுக - பாஜக கூட்டணி அமைக்கப்பட்டுவிட்டது என்று அறிவித்தார். கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும், வெற்றி பெற்ற பிறகு அதிமுகதான் ஆட்சி அமைக்கும். எங்கள் கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்றார். ஆக எங்கள் கூட்டணி தெளிவுபடுத்தப்பட்டுவிட்டது.

எங்களது கூட்டணியைக் கண்டு எதிரணியில் இருக்கும் கட்சிகளுக்கு பயம் வந்துவிட்டது. எப்போது எங்களைப் பற்றி பேசுகின்றனரோ? அப்போதே அவர்களுக்கு பயம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

எங்கள் கூட்டணி 210 தொகுதிகளில் வெல்லும். அதிமுகவும் பாஜகவும் எப்போதும் நாட்டு மக்களைப் பற்றி சிந்திக்கும். அதனால்தான் மக்கள் எங்களை விரும்புகின்றனர். அதுதான் எங்கள் கூட்டணியின் வெற்றி.

திமுக ஆட்சியில் விலைவாசி விண்ணை முட்டுகிறது, மின்கட்டணம், சொத்து வரி பல மடங்கு உயர்ந்துவிட்டது. அதிமுக ஆட்சியில் கோவையில் 5 புதிய அரசு கலைக் கல்லூரிகள் கட்டப்பட்டன. ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், சட்டக் கல்லூரி, கால்நடைப் பூங்கா, பொறியியல், பி.எட். கல்லூரி என பல கல்லூரிகளைத் திறந்ததால் உயர் கல்வி பயிலுவோரின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

தற்போது அறநிலையத் துறையின் கைகளில் பணம் இருப்பதை திமுகவால் பொறுக்க முடியவில்லை. அது அவர்களின் கண்களை உறுத்துகிறது. கோயில்களைக் கண்டாலே அவர்களுக்கு பிடிப்பதில்லை. அதனால், கோயில் பணத்தை எடுத்து கல்லூரி கட்டுகின்றனர்.

மக்கள் உண்டியலில் பணத்தைப் போடுவது கோயிலை அபிவிருத்தி செய்வதற்குத்தான். நாங்கள் அனைத்துக் கல்லூரிகளையும் அரசு பணத்தில்தான் கட்டினோம். அறநிலையத் துறையின் பணத்தை எடுத்து கல்லூரிகளைக் கட்டுவது எந்த விதத்தில் நியாயம், இதை ஒரு சதிச்செயலாகத்தான் பார்க்கிறோம்.

கல்விக்கு செலவிட வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் அரசுப் பணத்தில் இருந்துதான் கல்விக்கு செலவிட வேண்டும். அதேபோல் அருப்புக்கோட்டையில் வேளாண் ஆராய்ச்சி நிலையத்துக்கு சொந்தமான 225 ஏக்கர் நிலத்தை எடுத்து சிப்காட்டுக்கு கொடுக்கப் பார்க்கிறது திமுக.

அதைத் தடுக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு இடம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நீதிமன்றம் தீர்ப்பளித்தும் திமுக அரசு அதை செயல்படுத்தவில்லை.

அதிமுக அரசு அமைந்த பிறகு அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சியில் கோவையில் தொழில் துறை நலிவடைந்துவிட்டது. திமுக ஆட்சியை ஒரு வரியில் சொல்ல வேண்டுமானால் அது 'சிம்ப்ளி வேஸ்ட்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com