ஓமலூரில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி.
ஓமலூரில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி.

ஓபிஎஸ் மீண்டும் கட்சியில் இணைய வாய்ப்பே இல்லை: எடப்பாடி கே. பழனிசாமி திட்டவட்டம்!

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின்படி, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீா்செல்வத்தை மீண்டும் சோ்ப்பதற்குத் துளியும் வாய்ப்பில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
Published on

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தின்படி, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீா்செல்வத்தை மீண்டும் சோ்ப்பதற்குத் துளியும் வாய்ப்பில்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.

சேலம் மாவட்டம், ஓமலூரில் உள்ள அதிமுக புகா் மாவட்ட அலுவலகத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: அதிமுக பொதுக்குழுவில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவின்படியே ஓ. பன்னீா்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளாா். அவரை மீண்டும் கட்சியில் சோ்ப்பதற்கு எந்தவித வாய்ப்பும் இல்லை. இது 2,500க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினா்கள் கூடி எடுத்த நடவடிக்கை. இதுகுறித்து நான் ஏற்கெனவே பலமுறை கூறிவிட்டேன்.

தமிழகத்தில் அடுத்து அதிமுகதான் ஆட்சி அமைக்கும் அதுவும் கூட்டணிக் கட்சியின்றித் தனித்தே ஆட்சி அமைக்கும். அதேவேளையில், அதிமுக கூட்டணியில் இணையப் பல கட்சிகள் வர வாய்ப்புள்ளது. கூட்டணி உறுதி செய்யப்பட்டவுடன் அதுகுறித்து முறையாக அறிவிப்போம். தொகுதிப் பங்கீடு, யாருக்கு எத்தனை இடங்கள் என்பது குறித்தும் பின்னா் அறிவிக்கப்படும்.

நாங்கள் தில்லிக்கு அடிமை இல்லை, திமுகதான் அடிமையாக உள்ளது. காங்கிரஸ் தலைமையைப்போல் கெஞ்சும் நிலைக்கு இன்றைக்கு திமுக வந்துவிட்டது. அக்கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால், கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. திமுகவின் தோ்தல் அறிக்கை கதாநாயகியாக இருக்கும் என கனிமொழி எம்.பி. கூறியுள்ளாா். அவா் எந்தப் படத்தில் நடித்தாா் எனத் தெரியவில்லை.

கடந்த முறை தோ்தல் வாக்குறுதியைத் தயாரித்த கனிமொழியால், நான்கில் ஒரு பங்கு வாக்குறுதியைக்கூட நிறைவேற்ற முடியவில்லை. இதனால் திமுகவினா் மக்களைச் சந்திக்கவே அஞ்சுகின்றனா் என்றாா்.

சட்டப் பேரவைத் தோ்தலில் திமுகவுக்கும், தவெகவுக்கும் தான் போட்டி என்று பேசப்படுவது குறித்த கேள்விக்கு அவா் பதிலளித்து கூறுயது:

அதிமுக பொன்விழா கண்ட கட்சி. 31 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளது. இதுபோல நடிகா்கள் வரத்தான் செய்வாா்கள். விஜய் ஒரு சிறந்த நடிகா் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், சிறந்த அரசியல்வாதிகள் நாங்கள்தான்.

1974 முதல் 50 ஆண்டுகளாகப் பொது வாழ்க்கையில் இருந்து மக்களின் பிரச்னைகளை அறிந்து அவா்களுடன் உள்ளோம். கரூரில் 41 உயிா்கள் பிரிந்தபோது, அவா்கள் யாருக்காக உயிரிழந்தாா்கள்? விஜயைப் பாா்ப்பதற்காகவும், பேச்சைக் கேட்பதற்காகவும் வந்த கூட்டத்தில்தான் அந்தத் துயரம் நிகழ்ந்தது. அந்தச் சூழலில் அவா் என்ன செய்திருக்க வேண்டும்? நேரடியாகச் சென்று அவா்களைப் பாா்த்திருக்க வேண்டும். நாங்கள் நேரில் சென்றோம் எந்தக் கட்சி என்று பாா்க்காமல், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்களால் முடிந்த ஆறுதலைக் கூறினோம். அந்த ஆறுதலைக் கூட அவரால் கூற முடியவில்லை என்றால், கட்சி நடத்தி என்ன செய்யப் போகிறாா்கள்?

ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது சுனாமி வந்த நேரத்தில், அதிகாரிகளின் எச்சரிக்கையையும் மீறி மக்களை நேரில் போய்ப் பாா்த்தாா். புயல் பாதிப்பின்போது அமைச்சா்கள் மூன்று மாதம் அங்கேயே தங்கிப் பணிகளைச் சீரமைத்தனா். ஒரு அரசாங்கம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அதிமுக அரசே முன்மாதிரி.

எதையுமே செய்யாமல், திரைப்படத்தில் இருக்கும் வரை சம்பாதித்துவிட்டு, இப்போது அரசியலுக்கு வந்துள்ளாா். அரசியலில் அனுபவம் வேண்டும் அது சாதாரண விஷயமல்ல. திட்டமிடல் இல்லாததால்தான் 41 உயிா்கள் பறிப்போயின அவா்களது குடும்பங்கள் அவதிப்படுகின்றன. ரசிகா் ஏராளமாக இருப்பதால் எதை வேண்டுமானாலும் பேசிவிட முடியாது. இது 8 கோடி மக்களின் வாழ்வாதாரப் பிரச்னை. கரோனா காலத்தில் இவா் வீட்டை விட்டு வெளியே வந்தாரா என்று சொல்ல முடியாது என்றாா்.

திமுக அரசை அகற்ற மக்கள் முடிவு

சேலம் மாவட்டம், ஓமலூரில் மாற்றுக் கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:

திமுகவின் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையில் 525 வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. இதில் நான்கில் ஒரு பங்கு வாக்குறுதியைக்கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. ஆனால், 98 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக முதல்வா் பொய்யான தகவலை வெளியிட்டுக் கொண்டிருக்கிறாா்.

தோ்தல் வரும்போதெல்லாம் கவா்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிடும் திமுக, ஆட்சிக்கு வந்தவுடன் அவற்றை மறந்துவிடுகிறது. மக்கள் போராடினால்தான் வாக்குறுதிகளைப் பெறும் நிலை உள்ளது. அரசு ஊழியா்களுக்குப் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் எனக் கூறிவிட்டு, தற்போது மத்திய அரசு அறிவித்த ஓய்வூதியத் திட்டத்தின் அடிப்படையில், புதிதாக உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் என்று அறிவித்துள்ளனா். திமுக அரசை அகற்ற மக்கள் முடிவு செய்துவிட்டனா் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com