திமுக அரசின் அராஜகத்துக்கு கண்டனம்: நயினார் நாகேந்திரன்

பகுதிநேர ஆசிரியர்கள் கைதுசெய்யப்பட்டதற்கு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம்
திமுக அரசின் அராஜகத்துக்கு கண்டனம்: நயினார் நாகேந்திரன்
Published on
Updated on
1 min read

பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தம் செய்யக்கோரி, போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்ததை பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில், சென்னையில் பணி நிரந்தரம் வழங்கக் கோரி போராட முயன்ற பகுதிநேர ஆசிரியர்களைக் கைது செய்திருப்பதோடு 3 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவும் செய்துள்ள திமுக அரசின் அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

திமுகவின் ஆட்சியில் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்குக்கூட அரசு ஊழியர்கள் முதல் பாமர மக்கள்வரை அனைவரும் தெருவில் இறங்கிப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது தான் உண்மைநிலை.

இந்நிலையில், நியாயமாக கிடைக்க வேண்டிய பணிநிரந்தரத்தைக் கேட்டு போராட முயன்ற ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது எந்த வகையில் நியாயம்?

எதிர்க்கட்சியாக இருக்கும்போது, போராட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவளித்ததும், ஆட்சிக்கு வந்தால் பணிநிரந்தரம் செய்யப்படும் என உறுதியளித்ததும், நான்காண்டு கால ஆட்சியில் மறந்துவிட்டதா? அல்லது கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு ஆசிரியர்கள் நலனை அலட்சியப்படுத்துவதுதான் திராவிட மாடலா?

வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு தக்க பாடத்தை தமிழக ஆசிரியர்கள் கற்பிப்பார்கள் என்பது உறுதி என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் ஆசிரியர் பற்றாக்குறையைக் குறைக்க, 2012 ஆம் ஆண்டுமுதல் தொகுப்பூதிய பணி நியமனத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதனிடையே, திமுக ஆட்சிக்கு வந்தால், தற்காலிக ஆசியர்களுக்கு பணிநிரந்தரம் செய்து தரப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தனர்.

தற்போது, தமிழகத்தில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வரும்நிலையில், வாக்குறுதி அளித்தபடி பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிநிரந்தரம் செய்யக்கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, சென்னை ஓமந்துரார் பல்நோக்கு மருத்துவமனை அருகே போராட்டம் நடத்திய பகுதிநேர ஆசிரியர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

இதையும் படிக்க: ஆப்பிள் சிஓஓ பதவிக்கு இந்திய வம்சாவளி நியமனம்! சம்பளம், பொறுப்புகள் என்னென்ன?

TN teachers will teach DMK a lesson says Nainar Nagenthiran

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com