திமுக கூட்டணியில்தான் மதிமுக இருக்கும்; திமுக வெற்றிக்கும் பாடுபடுவோம்! - வைகோ

திமுக கூட்டணியில் தான் மதிமுக இருக்கும் என்றும் திமுக வெற்றிக்கு பாடுபடுவோம் என மதிமுக பொதுச்செயலர் வைகோ தெரிவித்தார்.
பூந்தமல்லியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பொதுச்செயலர் வைகோ, முதன்மை செயலர் துரை வைகோ ஆகியோருக்கு நிர்வாகிகள் பரிசளித்த  வெள்ளி வாள்...
பூந்தமல்லியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பொதுச்செயலர் வைகோ, முதன்மை செயலர் துரை வைகோ ஆகியோருக்கு நிர்வாகிகள் பரிசளித்த வெள்ளி வாள்...
Published on
Updated on
2 min read

திமுக கூட்டணியில் தான் மதிமுக இருக்கும். திமுக வெற்றிக்கு பாடுபடுவோம் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வியாழக்கிழமை தெரிவித்தார்.

சென்னை மண்டல மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் பூந்தமல்லியில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதற்கு திருவள்ளூர் மாவட்ட செயலர் மு.பாபு தலைமை வகித்தார். பூந்தமல்லி நகரச்செயலர் சங்கர் வரவேற்றார். இதில், மதிமுக பொதுச்செயலர் வைகோ, முதன்மைச் செயலர் துரை வைகோ எம்பி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் வைகோ பேசியதாவது, “நம்மை குறிவைத்து தாக்குகிறார்கள். நமது இயக்கம் இருக்க கூடாது என நினைக்கிறார்கள். மதிமுக காணாமல் போய்விட்டது, கரைந்து போய்விட்டது, வைகோ அரசியல் முடிந்துவிட்டது என செய்தி போடுகிறார்கள்.

சாத்தூரில் நடந்த கூட்டத்தில் 15 நிமிடம் மின்சாரம் வரவில்லை. 4 மணி நேரம் காத்திருந்த தொண்டர்கள் காற்றுக்காக வெளியே போனார்கள். அப்போது காலியான நாற்காலிகளை பார்த்து பத்திரிகையாளர்கள் புகைப்படம் எடுத்தார்கள். நான் பத்திரிகையாளர்களுக்கு விரோதி அல்ல. பத்திரிகையாளர்களை மிசாவில் அடைக்கலாம் என்ற கருத்தை சட்டத்தில் இருந்து அகற்றுங்கள் என கூறினேன்.

பத்திரிகை சுதந்திரத்திற்காக நான் பாடுபட்டவன். அரங்கம் நிறைந்த போது ஏன் புகைப்படம் எடுக்கவில்லை எனவே அரங்கத்தை விட்டு வெளியே செல்லுங்கள் என கூறினேன். உடனடியாக பத்திரிகையாளர்களிடம் தொண்டர்கள் வாக்குவாதம் செய்தார்கள். மல்லை சத்யா எதிரிகள், துரோகிகளோடு நமது கட்சியை அழிக்க வேண்டும் என வெளியே போனவர்களோடு தொடர்பு வைத்திருக்கிறார்.

இங்கிருந்து ஒரு கூட்டத்தை அழைத்து கொண்டு போகலாம் என திட்டமிட்டிருக்கிறார். மாமல்லபுரத்தில் படகில் சென்ற போது கடலில் படகு கவிழந்தபோது உடன் வந்த நண்பர் சத்யா தோளை பற்றிக் கொண்டேன் என உயிரை காப்பாற்றினாய் என்று நான் சொன்னேன் அப்படி சொன்னது உண்மை, 3 முறை காப்பாற்றியதாக மல்லை சத்யா கூறிய நிலையில் மற்ற 2 இடங்கள் எங்கே என்று தெரிவிக்க வேண்டும்.

மல்லை சத்யா 2 ஆண்டுகளில் 7 முறை வெளிநாடு சென்றுள்ளார்‌. இதுவரை எனக்கு தகவல் சொல்லவில்லை, என்னைச் சந்திக்கவும் இல்லை. மதிமுக கட்சியில் இருக்கிறேன். துணைப் பொதுச் செயலர் பதவியில் இருக்கிறேன் என பதிவு செய்யவில்லை.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடியது மதிமுக. அதைத் தடுத்து நிறுத்தியவர் பெயர்தான் வைகோ. திமுக கூட்டணியில் தான் மதிமுக இருக்கும், திமுக வெற்றிக்கு பாடுபடுவோம் இது என் கட்டளை என்றார் வைகோ.

நிகழ்வில் கட்சியின் அவைத் தலைவர் அர்ஜுன்ராஜ், பொருளாளர் செந்திலதிபன், கொள்கை விளக்க அணிச்செயலர் ஆ.வந்தியத்தேவன், அரசியல் ஆய்வு மையச்செயலர் இரா. அந்திரி தாஸ், தீர்மானக்குழு செயலர் மணிவேந்தன், தணிக்கை குழு உறுப்பினர் செந்தில் செல்வன், சிறுபான்மை பிரிவுச்செயலர் சிக்கந்தர், மகளிரணி செயலர் மல்லிகா தயாளன், சென்னை மண்டல மாவட்டச் செயலர்கள் சு.ஜீவன், குமார், டி.சி. ராஜேந்திரன், சைதை ப.சுப்பிரமணி, மா.வை.மகேந்திரன், பாரத் ராஜேந்திரன், லோகநாதன், ஆவடி சூரியகுமார், கருணாகரன், அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் அட்கோ மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஓரங்கட்டப்படும் மல்லை சத்யா!

மதிமுகவில் முதன்மைச்செயலர் துரை வைகோவுக்கும், துணைப் பொதுச்செயலர் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மோதல் போக்கு அதிகரித்து வந்தது.

இதையடுத்து வைகோ தலையிட்டு சமாதானப்படுத்தி வைத்தார். ஆனால் இருவருக்குமிடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வந்தது. இந்த நிலையில் கட்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் மல்லை சத்யா ஈடுபட்டு வருவதாக வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.

பூந்தமல்லியில் நடைபெறும் கூட்டத்தில் மல்லை சத்யாவின் படம், பெயர் இடம் பெறக் கூடாது என்று தலைமை கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து பூந்தமல்லியில் வைக்கப்பட்டுள்ள எந்த ஒரு பதாகையிலும் மல்லை சத்யாவின் பெயரோ, புகைப்படமோ இடம் பெறவில்லை. இந்த நிகழ்ச்சியில் மல்லை சத்யா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Summary

MDMK will remain in the DMK alliance; We will strive for DMK's victory too! - Vaiko

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com