மக்களின் குறைகளை பொறுமையாக கேட்டு நடவடிக்கை எடுக்க முதல்வர் அறிவுரை!

முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றியது குறித்து...
mk stalin
முதல்வர் மு.க. ஸ்டாலின் கோப்புப் படம்
Published on
Updated on
2 min read

மக்களுடைய குறைகளை பொறுமையாக கேட்டு, அவர்களுக்கு நியாயமான, நேர்மையான சேவையை விரைந்து வழங்கவேண்டும் என்று பயிற்சி முடித்த காவலர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

சென்னை, ஊனமாஞ்சேரி, தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் இன்று (ஜூலை 18) நடைபெற்ற காவல் துணை கண்காணிப்பாளர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

காவல்துறைக்கு நேரடி காவல் துணை கண்காணிப்பாளராக தேர்வு செய்யப்பட்டு, திமுக அரசால் பணி நியமன ஆணை வழங்கப்பட்டு, ஓராண்டு சிறப்பான பயிற்சியை முடித்து, இன்று உடல் வலிமை, மன உறுதி மிக்கவர்களாக நீங்கள் களத்துக்குச் செல்லப் போகிறீர்கள் என்பது பெருமைக்குரிய நிகழ்வு.

வலுவான அடிப்படை பயிற்சியை முடித்து, 9 பெண் அதிகாரிகள் உள்பட 24 காவல் துணைக் கண்காணிப்பாளர்களும் தங்களுடைய பணியிலும், வாழ்விலும், ஒளிமயமான ஏற்றத்தை கண்டிட மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவல் அதிகாரிகள் உயர்தரமான பயிற்சியை பெறவேண்டும் என்ற நோக்கத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் 2008-ல் 129 ஏக்கர் பரப்பளவில், இந்த பரந்து விரிந்த தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தைத் தொடங்கி வைத்தார்.

இங்கே பலவகை சட்டப்பயிற்சி, புலனாய்வு நுணுக்கம், கணினிசார் குற்றங்களைத் தடுக்கின்ற சிறப்புப் பயிற்சி, உளவியல் பயிற்சி, பொருளாதார குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை சிறப்பாக புலனாய்வு செய்கின்ற திறன், ஆயுதப் பயிற்சி போன்ற அனைத்து வகையான பயிற்சிகளையும் பெற்று, எந்த சவால்களையும் எதிர்கொள்ளுகின்ற திறனுடைன் நீங்கள் களத்துக்குச் செல்வது பெருமைமிக்க தருணம். இந்த காவல் உயர் பயிற்சியகத்தில் இதுவரை 5 ஆயிரத்து 55 நேரடி உதவி ஆய்வாளர்களுக்கும், 297 காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும் அடிப்படையான பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், கடந்த வாரம் 2 ஆயிரத்து 452 காவலர்கள், அடிப்படைப் பயிற்சியை முடித்து காவல் பணியில் சேர்ந்திருக்கிறார்கள் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

காவல் பணி என்பது மக்கள் பிரச்னைகளை நேரடியாக தீர்த்து வைக்கின்ற மிக உன்னதமான பணி. ஒவ்வொருவரும் பொதுமக்களிடம் கனிவாக, மரியாதையாக நடந்து, அவர்களுடைய குறைகளை பொறுமையாக கேட்கவேண்டும். அவர்களுக்கு நியாயமான, நேர்மையான சேவையை விரைந்து வழங்கவேண்டும்.

உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும். அதில் நீங்கள் எல்லாம் அப்டேட்-ஆகிக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒவ்வொருவரும் அறிவியல் சார்ந்த விசாரணை நடைமுறைகளில் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்.

ஃபீல்டுக்கு செல்கின்ற இந்த நேரத்தில், எப்படி ஃபிட்டாக இருக்கிறீர்களோ, அதேபோல, நீங்கள் எப்போதும் ஃபிட்டாக இருக்கவேண்டும். பணிச்சுமைகளுக்கு இடையில், நீங்கள் உங்கள் உடல்நலத்தையும் பார்த்துக் கொள்ளவேண்டும். குடும்பத்துடன் நேரம் செலவிட வேண்டும்.

காவல் துறையில் சிறப்பாக, நேர்மையாக பணியாற்றி, நீங்கள் மேலும், மேலும் பதவி உயர்வுகளைப் பெற்று, மக்கள் சேவையில் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்!

நான் மீண்டும் உங்களை சந்திக்கும்போது, ஃபீல்டுக்குச் செல்லும்போது, நீங்கள் வழங்கிய ஆலோசனைகளின் பேரில், சிறப்பாக மக்கள் பணியாற்றுகின்றோம் என்று நீங்கள் ஒவ்வொருவரும் சொன்னால், அதுவே எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி.

தமிழ்நாட்டு மக்களுக்கு துணையாகவும், சட்டம், ஒழுங்கு நிலைநாட்டுவதில், மிகுந்த அக்கறையோடும் நீங்கள் அனைவரும் திட்டமிட்டு, திறம்பட செயல்பட வேண்டும் என்று பேசினார்.

Summary

Chief Minister Stalin advised the newly trained police officers to patiently listen to the grievances of the people and provide them with fair and honest service promptly.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com