நாடாளுமன்றத்தில் எழுப்ப வேண்டிய பிரச்னைகள் என்னென்ன? - திமுக எம்.பி.க்கள் கூட்டத்தில் முடிவு!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பற்றி...
DMK MPs meeting with mk stalin
திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்DMK
Published on
Updated on
2 min read

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று(வெள்ளிக்கிழமை) காலை நடைபெற்றது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வருகிற ஜூலை 21 ஆம் தேதி தொடங்கும் நிலையில் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திமுக எம்.பி.க்கள் முன்வைக்க வேண்டிய பிரச்னைகள் தொடர்பாக இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

அதுதொடர்பாக மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்களும் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இதுகுறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

கடந்த 11 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசின் வஞ்சகத்தை நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்து, தமிழ்நாட்டுக்கான கல்வி - நிதி உள்ளிட்ட உரிமைகளை நிலைநாட்டுவோம்!

ஜனநாயக உரிமைகளுக்காகவும் - மாநிலங்களின் உரிமைகளுக்காகவும், என்றென்றும் வலுவான குரலை எழுப்பி வரும் திராவிட முன்னேற்றக் கழகம், தேசிய அரசியலில் மிக முக்கியமான பேரியக்கமாகத் திகழ்கிறது. ஒவ்வொரு முறை நாடாளுமன்றக் கூட்டத்தின் போதும், தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த குரலான தி.மு.கழகத்தின் குரல் - கழகத் தலைவரின் ஜனநாயக உரிமை முழக்கம் - கழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் குரலாக எதிரொலிக்கிறது. அந்தக் குரலைத்தான் நாடும் - நாட்டிலுள்ள அனைத்துக் கட்சி எம்.பி.,க்களும் நாடாளுமன்றக் கூட்டத் தொடர்களின்போது எதிர்பார்க்கிறார்கள். அதனை வழிமொழிகிறார்கள்.

தமிழ்நாட்டின் பிரச்சினைகளை மட்டுமின்றி, நாட்டின் மிக முக்கிய பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் எழுப்பி, நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும் ஜனநாயகப் பேரியக்கமாக விளங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், எதிர்வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அனைத்து மாநில முதலமைச்சர்களிடையே திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரான முதலமைச்சர் கடந்த 24.5.2025 அன்று தில்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் வலியுறுத்திய 'காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளைச் சுத்தம் செய்து மீட்கும் புதிய திட்டம்',

'மத்திய அரசின் திட்டங்களுக்கு, அனைவருக்கும் தொடர்பு மொழியாக இருக்கும் ஆங்கிலப் பெயர்களைச் சூட்டுதல்', 'மும்மொழிக் கொள்கையைத் திணித்து, பின்னர் மகாராஷ்டிர மக்களின் எதிர்ப்புக்குப் பணிந்து பின்வாங்கினாலும், அது பா.ஜ.க. ஆளும் மாநிலம் என்பதால் எஸ்எஸ்ஏ நிதியை அளித்து, தமிழ்நாட்டுக்கு எஸ்எஸ்ஏ நிதியை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மறுப்பது',

'மத்திய வரி வருவாயில் மாநிலங்களுக்கு 50 விழுக்காடு வரிப் பகிர்வு', '15-ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி தர வேண்டிய 41 விழுக்காடு வரி வருவாய் பங்கிற்குப் பதிலாக 33.16 விழுக்காடு பங்கு மட்டுமே அளித்து மாநிலங்களுக்கு இழைக்கப்படும் நிதி அநீதி', 'மத்திய அரசும் - மாநில அரசும் இணைந்து நிறைவேற்றும் திட்டங்களுக்கு மாநில அரசின் பங்கு தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஏற்பட்டு வரும் நிதி நெருக்கடி' ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் அழுத்தமாக எடுத்துரைப்பதுடன்,

தமிழர்களின் தனித்துவமிக்க பண்பாட்டை அறிவியல்பூர்வமாக நிரூபித்த இரும்பின் தொன்மை குறித்து மத்திய அரசு மௌனம் காப்பது, கீழடி ஆய்வறிக்கையை ஏற்க மறுப்பது, தமிழ்நாட்டிற்குரிய ரயில் திட்டங்களுக்கு நிதியளிக்காமல் வஞ்சிப்பது, உழைக்கும் கிராமப்புற மக்களுக்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட நிதியை முறையாக வழங்காமல் தாமதிப்பது, மாநிலத்தின் நிதி தன்னாட்சிக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் தமிழ்நாட்டிற்கான நிதியுரிமையைப் பறிப்பது எனத் தமிழ்நாடு தொடர்ச்சியாக வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து, நமக்கான உரிமைக்குரலை ஓங்கி ஒலிப்பதுடன்,

ஜம்மு-காஷ்மீருக்கு மாநிலத் தகுதி கொடுக்காமல் தட்டிக்கழிப்பது, வாக்காளர் சீர்திருத்தம் என்ற பெயரில் பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்தில் கோடிக்கணக்கானவர்களின் வாக்குரிமையைப் பறித்து ஜனநாயகத்தின் ஆணிவேரில் வெந்நீரை ஊற்றும் நோக்கில் தன்னாட்சிப் பெற்ற தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்துவது, தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை அரசால் தொடர்ந்து கைது செய்யப்படுவது, கச்சத்தீவு மீட்பு, கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வருவது, திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிப்பது, தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநிலங்களின் தாய்மொழிகளைப் புறக்கணித்து இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பது, ஏழை - எளிய மக்களைப் பாதிக்கும் ரயில் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாடாளுமன்றத்தில் எழுப்பிடவும்,

தமிழ்நாட்டின் நிதியுரிமை - மொழியுரிமை - கல்வியுரிமை ஆகியவற்றுடன் இந்தியாவின் கூட்டாட்சி உரிமை உள்ளிட்ட அனைத்திற்காகவும் வருகின்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் திராவிட முன்னேற்றக் கழக எம்.பி.க்கள் உரக்க குரல் எழுப்பி, கடந்த 11 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டை வஞ்சித்து, தமிழர்களுக்கு எதிரான பண்பாட்டு ஊடுருவலை நிகழ்த்தும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிரான தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை கழகத் தலைவர் - முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, நாடாளுமன்ற இரு அவைகளிலும் கழக உறுப்பினர்கள் உறுதியாகவும் ஒருங்கிணைந்தும் வெளிப்படுத்துவார்கள் என்று இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

Summary

DMK parliamentary members meeting was held today in Chennai, under the chairmanship of DMK president M.K. Stalin.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com