தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பள்ளிக் கட்டடங்கள் மீது அலட்சியமா? - அண்ணாமலை கேள்வி

தமிழகத்தில் பள்ளிக் கட்டடங்களின் நிலை பற்றி தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி

News image

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை

X

Updated On :21 ஜூலை 2025, 9:43 am

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் அனைத்து பள்ளிக் கட்டடங்களையும் தர உறுதிப் பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

ஈரோடு கோபிசெட்டிபாளையம் அருகே கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது பற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ரூ. 64.33 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கூகலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக் கட்டடத்தின் மேற்கூரை நேற்று இடிந்து விழுந்திருக்கிறது.

நேற்று விடுமுறை தினமானதால், வகுப்பறையில் மாணவர்களோ, ஆசிரியர்களோ இல்லாமல், அதிர்ஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டிருக்கிறது.

தமிழகம் முழுவதுமே, அரசுப் பள்ளிக் கட்டிடங்களின் மேற்கூரை இடிந்து விழுவது, தினசரி செய்தி ஆகியிருக்கிறது. பள்ளிக் குழந்தைகளுக்கான கட்டடங்கள் கட்டுவதில்கூட, திமுக அரசு இத்தனை அலட்சியமாகச் செயல்படுவதைச் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏழை, எளிய குடும்பப் பின்னணியில் இருந்து, அரசுப் பள்ளிகளில் பயில வரும் குழந்தைகள் உயிர், திமுக அரசுக்கு அத்தனை இளக்காரமாகப் போய்விட்டதா? கடந்த நான்கு ஆண்டுகளில், திமுக அரசு எந்தெந்த மாவட்டங்களில் புதிய பள்ளிக் கட்டடங்கள் கட்டியுள்ளன என்று ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தோம். அதற்கு, ஒவ்வொரு தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கும் கடிதம் எழுதி நாடகமாடியதோடு நிறுத்திக் கொண்டார் உதயநிதி ரசிகர் மன்றத் தலைவரான பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்.

விளம்பர ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், இதுவரை இடிந்து விழுந்த பள்ளிக் கட்டடங்களைக் கட்டிய ஒப்பந்ததாரர்கள் யார்? அவர்கள் மீது திமுக அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்பதை மக்களுக்கு வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும்.

மேலும், கடந்த நான்கு ஆண்டுகளில் திமுக அரசு கட்டிய கட்டடங்கள் அனைத்தையுமே, தர உறுதிப் பரிசோதனைக்கு உள்ளாக்குவது, அனைத்துத் தரப்பு மக்களுக்குமே நல்லது" என்று பதிவிட்டுள்ளார்.

Summary

Former TN BJP leader Annamalai has urged that all school buildings in Tamil Nadu should be subjected to quality assurance testing.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.