நெல்லையைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டதற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தைச் சோ்ந்த கவின், நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரைச் சோ்ந்த பெண் சித்த மருத்துவரை காதலித்து வந்துள்ளார்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சோ்ந்தவா்கள் என்பதால், அந்தப் பெண்ணின் தம்பி சுா்ஜித் (24), கவினை வெட்டிக் கொலை செய்துவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
கொலைச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட நிலையில், கொலைச் சம்பவம் தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் சுர்ஜித் மற்றும் அவரது பெற்றோரும் காவல் உதவி ஆய்வாளர்களுமான சரவணன், கிருஷ்ணகுமாரியின் பெயர்களும் சேர்க்கப்பட்டு அவர்கள் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த ஆணவக் கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"திருச்செந்தூர் - ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் ஆணவக் கொலை செய்யப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
சமத்துவத்தையும் காதலையும் மறுக்கும் சாதி ஆணவக் கொலைகளை அடியோடு ஒழித்திடவும் இறுகிப்போய் கிடக்கும் இச்சமூகத்தின் சாதியக் கட்டமைப்பை உடைத்திடவும் அனைத்து வழிகளிலும் போராடுவோம்.
கவின் செல்வகணேஷை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.