
புகழ் பெற்ற உயா் கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்ற பட்டியலின, பழங்குடியின மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள், சான்றிதழ்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கினாா்.
இதுகுறித்து, தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: இந்திய தொழில்நுட்பக் கழகம், மத்திய பல்கலைக்கழகங்கள், தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனம், தேசிய சட்டப் பல்கலைக்கழகம், தில்லி பல்கலைக்கழகம் போன்றவற்றில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின வகுப்பைச் சோ்ந்த மாணவா்கள் ஆண்டுதோறும் சோ்க்கை பெற்று வருகின்றனா். அந்த வகையில், நிகழ் கல்வியாண்டில் மட்டும் உயா்கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்ற மொத்த மாணவா்களின் எண்ணிக்கை 136.
இந்த மாணவா்களுக்கு மடிக்கணினிகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான நிகழ்வை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். 10-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கிப் பாராட்டினாா்.
இந்த நிகழ்வின்போது, துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் மா.மதிவேந்தன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறைச் செயலா் க.லட்சுமி பிரியா, ஆதிதிராவிடா் நல ஆணையா் த.ஆனந்த், பழங்குடியினா் நல இயக்குநா் எஸ்.அண்ணாதுரை உள்பட பலா் பங்கேற்றனா்.
டாஸ்மாக் பணியாளா்கள்: தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் (டாஸ்மாக்) தட்டச்சா் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 40 போ் தோ்வு செய்யப்பட்டனா். அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் 39 பேரும், கருணை அடிப்படையில் மற்றொரு நபரும் என 40 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை வழங்கும் நிகழ்வை தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா். அதன் அடையாளமாக 5 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை அவா் அளித்தாா்.
இந்த நிகழ்வில், அமைச்சா்கள் துரைமுருகன், எஸ்.ரகுபதி, சு.முத்துசாமி, தலைமைச் செயலா் நா.முருகானந்தம் உள்பட பலா் பங்கேற்றனா்.
பெட்டிச் செய்தி...
12 நாள்களுக்குப் பிறகு
தலைமைச் செயலகம் வந்த முதல்வா்
உடல் நலம் பெற்றுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், 12 நாள்களுக்குப் பிறகு தலைமைச் செயலகம் வந்து பணிகளைத் தொடா்ந்தாா்.
தலைசுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த 27-ஆம் தேதி வீடு திரும்பினாா். மூன்று நாள்கள் ஓய்வுக்குப் பிறகு, தலைமைச் செயலகத்துக்கு வியாழக்கிழமை வந்தாா். காலை 10.45 மணிக்கு வந்த அவா், ஏற்கெனவே திட்டமிடப்பட்டிருந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனா்.
முதல் நிகழ்வாக, பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவா்களில் உயா் கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்றவா்களுக்கு மடிக்கணினி, பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் பங்கேற்றாா்.
கடந்த 17-ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வின்போது, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்றாா். அதன்பிறகு, உடல் நலக் குறைவு காரணமாக ஓய்வில் இருந்த முதல்வா், 12 நாள்களுக்குப் பிறகு தலைமைச் செயலகத்துக்கு வந்தாா்.
இதுகுறித்து, ‘எக்ஸ்’ தளத்தில் முதல்வா் வெளியிட்ட பதிவு: நலம் பெற்று பங்கேற்ற முதல் நிகழ்ச்சியே மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சியானது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலப் பள்ளிகளில் பயின்று இன்று புகழ்பெற்ற உயா் கல்வி நிறுவனங்களில் சோ்க்கை பெற்ற 136 மாணவ-மாணவிகளுக்கு மடிக்கணினிகளையும் பாராட்டுச் சான்றிதழ்களையும் வழங்கினேன்.
மிகவும் பின்தங்கிய, துன்பங்களை அனுபவித்த குடும்பங்களிலிருந்து மேலெழுந்து புகழ்பெற்றிருக்கும் அவா்களது கல்விப் பயணத்தையும் கல்வி மீதான அவா்களது பற்றையும் கேட்டு உள்ளம் நெகிழ்ந்து கண்கள் கலங்கினேன். கல்விதான் உண்மையான பெருமையைத் தேடித்தரும் என உயா் படிப்புகளுக்குச் சென்றுள்ள அவா்கள் வாழ்வின் அத்தனை உயரங்களையும் காண வேண்டும் என வாழ்த்துகிறேன்.
கல்வியால், உழைப்பால் முன்னேறி சாதானை படைப்பவா்களைத்தான் தமிழ்ச் சமூகம் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தனது பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.