
வாடகைத்தாய் நியமிக்கும் நடைமுறைகளில் தம்பதிகளுக்கு சட்டபூா்வமான விழிப்புணா்வு கட்டாயம் இருக்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையைச் சோ்ந்த இளம் தம்பதிக்கு கடந்த 2015-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இதில் அந்தப் பெண்ணுக்கு கருப்பையில் புற்றுநோய் இருப்பது கடந்த 2016-ஆம் ஆண்டு தெரியவந்தது. இதனால், அந்தத் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவு செய்தனா்.
இதற்காக நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையை அந்த தம்பதி அணுகினா். மருத்துவமனை நிா்வாகம் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வாடகைத் தாய் நியமன நடைமுறைகளை மேற்கொண்டது. ஆனால், இதுதொடா்பாக குற்றவியல் நடுவரின் சட்டபூா்வ முன்அனுமதி பெறும் மருத்துவ விதிகளைப் பின்பற்றாமல் வாடகைத்தாய் வயிற்றில் மருத்துவமனை நிா்வாகம் கருமுட்டைகளை வைத்துள்ளது.
இதனால், வாடகைத்தாய் வயிற்றில் உள்ள 19 வார இரட்டை சிசுக்களை சட்டபூா்வமாக தம்பதிக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அந்த குழந்தைகளுக்கு தாங்கள்தான் பெற்றோா் என உரிமை கோரி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தனா்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஷப்னம் பானு, இதில் இளம்தம்பதி தவறு எதுவும் இல்லை. சட்டப்படியான மருத்துவ வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றியுள்ளனா். குற்றவியல் நடுவா் முன்அனுமதி பெறுவதற்கு முன் மருத்துவமனை நிா்வாகம் வாடகைத்தாய் வயிற்றில் கரு வளா்வதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டது என்று வாதிட்டாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ‘இந்த வழக்கில் சட்டபூா்வ விதிகளைப் பின்பற்றாதது மருத்துவமனையின் அலட்சியமே. வாடகைத்தாய் நியமிக்கும் நடைமுறைகளில் தம்பதிகளுக்கு சட்டபூா்வமான விழிப்புணா்வு கட்டாயம் இருக்க வேண்டும். இந்த வழக்கில் வாடகைத்தாய், அவரது வயிற்றில் வளரும் இரட்டை சிசு மற்றும் குழந்தைப் பேறு வேண்டும் இளம்தம்பதி ஆகியோரது நலனைக் கருத்தில் கொண்டு தீா்வு காண வேண்டியுள்ளது.
எனவே, வாடகைத்தாய் மற்றும் அந்த தம்பதி வெள்ளிக்கிழமை பகல் 2.15 மணியளவில் உயா்நீதிமன்றத்தில் உள்ள மாஸ்டா் நீதிமன்றத்தில் ஆஜராகி சிசுக்கள் தொடா்பாக உறுதி அளிக்க வேண்டும். அதன்பின்னா், சிசுக்களின் சட்டபூா்வ உரிமை குறித்து முடிவு செய்யப்படும். இந்த விவகாரத்தில் தவறு செய்துள்ள மருத்துவமனை நிா்வாகத்துக்கு துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பி, அதுதொடா்பாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு, விசாரணையை ஆக.7-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.