துணியைக் கட்டி மறைக்கும் பாஜக மாடல் அல்ல: முதல்வர் ஸ்டாலின்

திமுக தலைவர் ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதம்.
mk stalin
முதல்வர் மு.க. ஸ்டாலின்கோப்புப் படம்
Published on
Updated on
1 min read

துணி மறைப்பு கட்டி, உண்மை நிலையை உலகத் தலைவர்களின் கண்களிலிருந்து மறைக்கும் பா.ஜ.க. மாடல் இதுவல்ல என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:

திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழு மதுரை மாநகரில் மற்றொரு சித்திரைத் திருவிழா போல நடந்து, திமுக வரலாற்றில் முத்திரை பதித்திருக்கிறது. மதுரை வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் அமைச்சர் பி.மூர்த்தி மதுரை மண்ணுக்கேயுரிய கோலாகலத்துடன் ‘பொதுக்குழுவா திமுக மாநாடா!’ என்று பிரமிக்கத்தக்க வகையில் எழுச்சிமிக்க கொள்கை நிகழ்வாகச் சிறப்பாக நடத்திக் காட்டிவிட்டார்.

துணி மறைப்பு கட்டி, உண்மை நிலையை உலகத் தலைவர்களின் கண்களிலிருந்து மறைக்கும் பா.ஜ.க. மாடல் இதுவல்ல, இது திராவிட மாடல். மறைப்பை அகற்றி, மறைக்கப்படுவதைக் கண்டறிந்து, உடனடியாக முழுமையான தீர்வுக்கான வழி செய்யும் மாடல் என்பது பொதுமக்களுக்கு மட்டுமின்றி, திமுகவை விமர்சிப்பதையே முழுநேர - பகுதிநேரத் தொழிலாகக் கொண்டிருப்பவர்களுக்கும் புரிந்திருக்கும்.

திமுகவின் ரத்தநாளங்களாக இருக்கும் இந்த உண்மைத் தொண்டர்களின் பிரதிநிதிகளாகத்தான் திமுகவின் இதயமான பொதுக்குழுவில் இடம்பெற்றுள்ள நிர்வாகிகள் இருக்கிறார்கள். இதயமும் ரத்தநாளங்களும் எப்போதும் இணைந்து சீராகச் செயல்பட்டால்தான் திமுக எனும் நம் உயிர் வலிவோடு நீடித்திருக்கும் என்பதை எண்ணியபடியே பொதுக்குழு நடைபெற்ற உத்தங்குடி கலைஞர் திடலுக்கு வந்து சேர்ந்தேன்.

வரலாற்றுச் சிறப்புமிக்க மதுரை பொதுக்குழுவில் திமுக தொண்டர்களாம் உங்களின் குரலாக மண்டலத்திற்கு ஒருவர் என்ற முறையில் இளைய நிர்வாகிகளும் - மூத்த நிர்வாகிகளும் தங்கள் கருத்துகளைப் பொதுக்குழு மேடையில் பதிவு செய்தனர். பொதுக்குழு இதயம் என்றால், அதில் உடன்பிறப்புகளின் குரல்தான் இதயத்துடிப்பு. அந்தத் துடிப்பின் ஓசை எப்படி இருக்கிறது என்பதை திமுக தலைவர் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் கவனமாகக் கேட்டுக் கொண்டேன்.

உங்களில் ஒருவனான என்னுடைய நம்பிக்கையும் வலிமையும் நீங்கள்தான். உங்களின் நலன், உங்கள் செயல்பாடு, திமுகவின் முன்னேற்றம் ஆகியவற்றை அறிந்துகொள்ளத் தொகுவாரியாக நிர்வாகிகள் சந்திப்பைத் தொடங்கவிருக்கிறேன். தொடர்ச்சியான பயணங்களில் உங்கள் ஊருக்கு வரும்போது உடன்பிறப்புகளின் முகம் கண்டு மகிழ்வேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: மகளின் திருமணத்தில் கப்கேக் சாப்பிட்ட தாய் மூச்சுத்திணறி பலி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com