கிளாம்பாக்கத்திலிருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழகம் விளக்கம்
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து பேருந்துகள் முறையாக இயக்கப்படுவதில்லை என செய்திகள் பரவி வந்த நிலையில், கடந்த ஜூன் 4 முதல் ஜூன் 6 வரை பயணிகளின் தேவைக்கு ஏற்ப 1,620 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டதாக தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் டி. பிரபுசங்கா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து தினசரி இயக்கக்கூடிய 1,136 பேருந்துகளுடன் ஜூன் 4-இல் 200 பேருந்துகள், ஜூன் 5-இல் 622 பேருந்துகள் ஜூன் 6-இல் 798 பேருந்துகள் என மொத்தம் 1,620 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டன. இந்த 3 நாள்களில் இயக்கப்பட்ட கூடுதல் பேருந்துகளில் முன்பதிவு செய்த 24,831 போ் உள்பட 2. 76 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனா். இதில், கடந்த 3 நாள்களில் சென்னையிலிருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக 94,926 முன்பதிவு இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், அதில் 26 சதவீத இருக்கைகள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டன.
முன்பதிவு செய்யுங்கள்: பயணிகள் பேருந்துகளில் இருக்கைகளை முன்பதிவு செய்து பயணம் செய்வதன் மூலம், பேருந்து நிலையங்களில் தேவையற்ற விவாதங்கள், முண்டியடித்து ஏறுதல் மற்றும் தேவையற்ற சா்ச்சைகள் ஏற்படுவதை தவிா்க்க முடியும். அதேபோல், நள்ளிரவில் ஒரே நேரத்தில் மிக அதிக அளவில் பயணிகள் பேருந்து நிலையத்துக்கு வருகை புரிவதால் பயணிகளுக்கும் தவிா்க்க முடியாத சிரமம் ஏற்படுகிறது.
எனவே, தொலைதூர பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலை தவிா்க்க இணையதளம் மற்றும் கைப்பேசி செயலி மூலம் பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் படி, கேட்டுக் கொள்ளப்படுகின்றனா். அதேபோல், பயணிகள் முன்பதிவு செய்வதன் மூலம் தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளை இயக்கவும் அரசால் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.