திமுக அரசைப் பற்றி பேச இபிஎஸ்ஸுக்கு எந்த தார்மிக உரிமையும் கிடையாது: அமைச்சர் ரகுபதி

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதில்.
minister ragupathi reply for EPS
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி | அமைச்சர் ரகுபதி DIN
Published on
Updated on
2 min read

திமுக அரசைப் பற்றி பேச எந்த தார்மிக உரிமையும் கிடையாது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி பதிலளித்துள்ளார்.

தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் 13 வயது சிறுமிக்கு விடுதி காவலாளி பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி திமுக அரசை கடுமையாக சாடியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் ரகுபதி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

"தாம்பரம் அரசு சேவை இல்லத்தில் காவலாளியால் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவத்தில் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கொண்டு விடுதியில் தங்கியிருந்த 100 க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் வேறு யாரும் பாதிக்கப்பட்டனரா என தனித்தனியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

முதல் கட்ட விசாரணையில் வேறு யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. இனி அரசு சேவை இல்லங்களில் பெண் காவலாளிகளை நியமிக்க சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இக்கொடுமையை மிக துணிச்சலோடு எதிர்கொண்டு புகார் அளித்த மாணவிக்கு இந்த திமுக அரசு என்றும் துணை நிற்கும்.

திமுக ஆட்சியும் முதலமைச்சரும் பெண்களுக்கு அரணாக இருப்பதால்தான் இந்த மாதிரி குற்றச் சம்பவங்களை எதிர்த்து தைரியமாக புகார் அளிக்க பெண்கள் முன் வருகின்றனர். கடந்தகால அதிமுக ஆட்சியில் பாதிக்கப்பட்ட பெண்களே தாக்குதல்களுக்குள்ளாகிய மோசமான சூழல் நிலவியதை தமிழ்நாட்டு பெண்கள் யாரும் இன்னும் மறக்கவில்லை.

அப்படிப்பட்ட சூழலை எல்லாம் மாற்றி பெண்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி பெண்களின் முன்னேற்றத்திற்கு துணை நிற்பதோடு பெண்கள் பாதுகாப்பிலும் துளியும் சமரசமற்று செயலாற்றி வருகிறது திமுக அரசு.

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிரான தண்டனையை மிகக் கடுமையாக்கியதோடு குற்றவாளிகளை விரைந்து கைது செய்து, விரைவான விசாரணை மேற்கொள்ளப்பட்டு உடனடியாக தண்டனையும் பெற்றுக்கொடுத்து வருகிறது திமுக அரசு. அரசின் இச்செயலையும் காவல்துறையின் செயல்பாட்டையும் உயர்நீதிமன்றமே பாராட்டியும் உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை அதிமுக அரசு எப்படி கையாண்டது என்பது நாட்டு மக்களுக்கு நன்றாக தெரியும். அதிமுகவைச் சேர்ந்த குற்றவாளிகளை காப்பாற்ற புகார் அளித்த பெண்ணின் குடும்பத்தையே அதிமுக குண்டர்களை விட்டு தாக்கிய கொடுமையும் அரங்கேறியது.

அப்படி பெண்களுக்கு எதிரான அதிமுக ஆட்சியை நடத்திய பழனிசாமிக்கு தற்போது குற்றங்களைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் குற்றங்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பெண்களுக்கு ஆதரவாக இருந்துவரும் திமுக அரசைப்பற்றி பேச எந்த தார்மிக உரிமையும் கிடையாது.

இதோ இப்போதுகூட அரசு விரைவாக அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்ட பின்னும் இதன் மூலம் எப்படியாவது தில்லியின் எஜமானர்களுக்கு சாமரம் வீச பாதிக்கப்பட்ட மாணவியின் பக்கம் நிற்காமல் அதை வைத்து அரசியல் செய்யத் தொடங்கி விட்டார் பழனிசாமி.

எப்போதெல்லாம் அமித்ஷாவிற்கும் டெல்லிக்கும் ஆபத்து வருகிறதோ அப்போதெல்லாம் தில்லி கட்டுப்பாட்டில் இருக்கும் பழனிசாமி ஓடோடி வந்து வீண் அவதூறுகளை பரப்பி காப்பாற்றத் துடிக்கிறார். தில்லி அடிமை என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார் பழனிசாமி" என்று கட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com