பேருந்து, மெட்ரோவில் சக்கர நாற்காலிக்கு இடம் கட்டாயம்: புதிய வரைவு வழிகாட்டுதல் வெளியீடு!

பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் சக்கர நாற்காலிகள் வைக்க இடம், பாதுகாப்பு பெல்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் கட்டாயம்.
பேருந்து, மெட்ரோவில் சக்கர நாற்காலிக்கு இடம் கட்டாயம்: புதிய வரைவு வழிகாட்டுதல் வெளியீடு!
Updated on

மாற்றுத்திறனாளிகளுக்கு தடையற்ற போக்குவரத்துப் பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில் பேருந்துகள், மெட்ரோ ரயில்களில் சக்கர நாற்காலிகள் வைக்க இடம், பாதுகாப்பு பெல்ட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கட்டாயமாக்கும் வகையில் புதிய வரைவு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை சாா்பில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் 2016-இன் கீழ், அவா்களுக்கு தடையற்ற சூழலை உருவாக்கும் வகையில் இந்த வரைவு வழிகாட்டுதல் தயாரிக்கப்பட்டு, பொதுமக்களின் கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக வெளியிடப்பட்டுள்ளது.

‘போக்குவரத்து அணுகல் வழிகாட்டுதல்’ என்ற தலைப்பிலான இந்த வரைவு வழிகாட்டுதலில், மாற்றுத்திறனாளிகள் பொதுப் போக்குவரத்தில் பயணச் சீட்டு முன்பதிவு செய்வதுமுதல் பயணம் மேற்கொள்வது வரையிலான முழுமையான அனைத்து நிலைகளிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வகையில் உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் பெரும்பாலான வழிகாட்டுதல்கள் எந்தவித விலக்கும் இன்றி கட்டாயம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வழிகாட்டுதல்களாக குறிப்பிடப்பட்டுள்ளன.

அதன்படி, மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கொள்முதல் செய்யப்படும் அனைத்து புதிய பேருந்துகளும் தாழ்தள நுழைவாயில், சாய்வுதளம், இருக்கைகளில் பாதுகாப்பு பெல்ட் மற்றும் சக்கர நாற்காலிகளை வைப்பதற்கான இடவசதி ஆகியவை இடம்பெற்றிருக்க வேண்டும்.

ஏற்கெனவே இயங்கிவரும் பிரதம மந்திரி மின்சார பேருந்து சேவை மற்றும் நகரங்களுக்கு இடையேயான வகை-3 ரக பேருந்துகளில் ஏற்கெனவே பரிசோதிக்கப்ட்ட மின்தூக்கி அல்லது சாய்வுதள பாலம் அமைப்புகள் இடம்பெறும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். நடக்க சிரமப்படுபவா்களின் வசதிக்காக இந்தப் பேருந்துகளில் குறைந்தபட்சம் நான்கு முன்இருக்கைகளில் இருக்கை பெல்ட் வசதி பொருத்தப்பட வேண்டும்.

மெட்ரோ மற்றும் ரயில் நடைமேடைகளில் உள்ள இடைவெளிகளை ரப்பா் நிரப்பிகள் கொண்டு நிரப்ப வேண்டும். சக்கர நாற்காலிகள் செல்ல வசதியாக ரயிலின் கதவுகள் அகலப்படுத்தப்பட வேண்டும்.

நீண்ட தூர ரயில்களில் குறைந்தபட்சம் ஒரு பெட்டியிலாவது சக்கர நாற்காலி வைப்பதற்கான இடவசதியும், மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையிலான (வகை ‘ஏ’) கைப்பிடிகளுடன் கூடிய கழிப்பறை வசதியும் இடம்பெறச் செய்ய வேண்டும்.

விமான நிலையங்களில் வாகனம் நிறுத்துமிடம் முதல் விமானநிலைய பரிசோதனை, விமானத்தில் ஏறுதல் வரை நகரும் சாய்வு தளங்கள், சக்கர நாற்காலிக்கு ஏற்ற இருக்கை வசதிகள் உள்பட மாற்றுத்திறனாளிகள் தடையின்றி பயணம் செய்யும் வகையிலான வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள் தங்களின் உதவி உபகரணங்ளை வைப்பதற்கு போதிய இடவசதியை விமான நிறுவனங்கள் விமானத்தில் ஏற்படுத்தித் தரவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப மோட்டாா் வாகனச் சட்டம், நகர பேருந்து விவரக்குறிப்புகள் மற்றும் கட்டடக் குறியீடுகளில் தேவையான உடனடி மாற்றங்கள் மேற்கொள்ளவும் வரைவு வழிகாட்டுதலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com