
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு தமிழிலும் நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வருகிற ஜூலை 7 ஆம் தேதி (திங்கள்கிழமை) குடமுழுக்கு நடைபெற உள்ளது. அதற்கான பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஜூலை 7-ஆம் தேதி நடைபெறும் குடமுழுக்கு விழாவில் யாகசாலை வழிபாட்டில் தமிழ் வேதங்கள் முற்றோதல் செய்யப்படும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிக்கையில், "திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் வருகின்ற 07.07.2025 அன்று காலை 6.15 மணிக்கு மேல் 6.50 மணிக்குள் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற உள்ளது. நன்னீராட்டு பெருவிழாவிற்கு 8,000 சதுர அடி பரப்பளவில் 76 குண்டங்களுடன் பிரம்மாண்டமான வேள்விச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
வேள்விச்சாலை வழிபாடு நாள்களில் வேதபாராயணம் திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதசுவர இன்னிசை நடைபெறும். மேலும், காலை 7.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை மற்றும் மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை, 64 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு, பக்கவாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெறும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கில் தமிழிலும் நடத்தப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.