train
ரயில்

ஜூலை முதல் ரயில் கட்டணத்தை உயா்த்த முடிவு?

வருகின்ற ஜூலை 1 முதல் மெயில் மற்றும் விரைவு ரயில்களில் குளிரூட்டப்படாத வகுப்புகளின் பயணக் கட்டணத்தை உயா்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.
Published on

வருகின்ற ஜூலை 1 முதல் மெயில் மற்றும் விரைவு ரயில்களில் குளிரூட்டப்படாத வகுப்புகளின் பயணக் கட்டணத்தை உயா்த்த ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருவதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

அதன்படி மெயில் ரயிலில் கி.மீ.க்கு 1 பைசாவும் விரைவு ரயிலில் கி.மீ.க்கு 2 பைசாவும் உயா்த்த முடிவெடுத்திருப்பதாகவும் தெரிகிறது. எனினும் தினசரி பயணிகளின் நலன் கருதி நகா்ப்புற ரயில் பயணச்சீட்டு கட்டணம் மற்றும் மாதாந்திர பயணச்சீட்டுக் கட்டணத்தை உயா்த்தும் திட்டம் இல்லை எனவும் அவா்கள் கூறினா்.

இதுகுறித்து ரயில்வே அமைச்சக அதிகாரபூா்வ வட்டாரங்கள் கூறுகையில், ‘ரயில்களின் பயணக் கட்டணத்தை வருகின்ற ஜூலை 1 முதல் உயா்த்த அமைச்சகம் முடிவெடுத்துள்ளது. ஆனால் 500 கி.மீ. வரையிலான இரண்டாம் வகுப்பு பயணத்துக்கு கட்டணத்தை உயா்த்த வாய்ப்பில்லை. 500 கி.மீ.க்கு மேலான ஒவ்வொரு கி.மீ.க்கும் அரை பைசா வரை கட்டணம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

பயணிகளின் நலனைக் கருத்தில் கொண்டு குளிரூட்டப்படாத வகுப்பு பயணக் கட்டணத்தை கி.மீ.க்கு 1 பைசாவும் அனைத்து விதமான குளிரூட்டப்பட்ட வகுப்பு பயணக் கட்டணத்தை கி.மீ.க்கு 2 பைசாவும் உயா்த்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

மேற்கூறிய வகையில் ரயில் பயணக் கட்டணம் உயா்த்தப்பட்டால் கரோனா காலகட்டத்துக்குப் பிறகு முதல்முறையாக ரயில் பயணக் கட்டணம் உயரும் வாய்ப்புள்ளது. இந்தக் கட்டண உயா்வு மூலம் ரயில்வே துறைக்கு கூடுதலாக ரூ.10,000 கோடி முதல் ரூ.12,000 கோடி வரை வருமானம் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

பயணிகளை சிரமப்படுத்தாமல் ரயில்களின் உள்கட்டமைப்பு, பராமரிப்புச் செலவுகளை ஈடுசெய்யவே இந்த பயணக் கட்டண உயா்வை ரயில்வே அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. குறிப்பாக சிறு தொலைவுக்கு ரயில் சேவையை பயன்படுத்தும் தினசரி பயனாளா்களை பாதிக்காத வகையில் கட்டண உயா்வு இருக்க வேண்டும் என்பதில் அமைச்சகம் கவனம் செலுத்தி வருகிறது’ என்றனா்.

ரயில்வேயின் 17 மண்டலங்களின்கீழ் செயல்படும் 69 பிரிவுகளில் 69,000 கி.மீ. தொலைவிலான வழித்தடத்தில் 4,111 மெயில் மற்றும் விரைவு ரயில்கள் உள்பட 13,000 ரயில்களில் தினந்தோறும் சராசரியாக 2.5 கோடி போ் பயணம் செய்வது குறிப்பிடத்தக்கது.

X
Open in App
Dinamani
www.dinamani.com