மாப்பிள்ளை அவர்தான், அவர் அணிந்திருக்கும் சட்டை என்னுடையது: பிரதமரை சாடிய முதல்வர்!

பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின்.
முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி.
முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி.
Published on
Updated on
2 min read

மாப்பிள்ளை அவர்தான், அவர் அணிந்து கொண்டிருக்கக்கூடிய சட்டை என்னுடையது என்று பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 26) திருப்பத்தூர் மாவட்டம், மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:

கலைஞர் கருணாநிதியின் முக்கியமான கனவுகளில் ஒன்று “குடிசையில்லா தமிழ்நாடு”! அந்தக் கனவை நனவாக்கும் வகையில், கலைஞரின் பெயரிலான கனவு இல்லம் திட்டத்தில் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 6 ஆண்டுகளில், எட்டு லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டித் தரப் போகிறோம்.

ஒரு வீட்டுக்கு மூன்றரை லட்சம் ரூபாய் தருகிறோம். கடந்த இரண்டு ஆண்டில் மட்டும் இரண்டு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தோம். அதில், 90 ஆயிரம் வீடுகள் கட்டி முடித்துவிட்டோம். மீதமுள்ள வீடுகள் பணியும் விரைந்து நடைபெற்றுகொண்டு வருகிறது! இதை நான் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கிறேன் - கேட்டுகொண்டே இருப்பேன்.

இதேபோல், மத்திய அரசு வீடு கட்டும் திட்டமும் இருக்கிறது! அது ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். யாருடைய பெயரில்? பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம் என்று அதற்கு பெயர்!

ஒரு வீடு கட்டுவதற்கு 1 லட்சத்து 20 ஆயிரம் என்று நிர்ணயித்திருக்கிறார்கள். இதில், 60 விழுக்காடு நிதியை மத்திய அரசும், 40 விழுக்காடு நிதியை மாநில அரசும் தர வேண்டும். ஒரு லட்சத்து இருபது ஆயிரத்தில் வீடுகட்ட முடியுமா? அதிலும் 60 சதவீதம் அதாவது, 72 ஆயிரம் ரூபாய் தான் மத்திய அரசு தருகிறது. மீதி கூடுதலாக, நம்முடைய மாநில அரசு, ஒரு லட்சத்து 62 ஆயிரம் ரூபாயை வழங்கி வீடு கட்டி தருகிறோம்.

பெயர்தான் அவர்களுடையது! நிதி நம்முடையது! அதனால்தான், நான் ஏற்கெனவே ஒரு டயலாக்கை நினைவுப்படுத்தினேன்… “மாப்பிள்ளை அவர்தான் ஆனால், அவர் அணிந்து கொண்டிருக்கக்கூடிய சட்டை என்னுடையது”! இப்படிதான், தமிழ்நாட்டிற்குத் தர வேண்டிய நிதியை ஒழுங்காக தருவது இல்லை! தந்தாலும் அரைகுறைதான்!

இந்த நிலையில் மத்தியத்தில் இருக்கின்றவர்களின் எண்ணம் எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டு மக்களை மதத்தால் - சாதியால் - பிளவுபடுத்த தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களால் முடியாதபோது, இங்கு இருக்கக்கூடிய அ.தி.மு.க. கட்சியையும் சேர்த்துக்கொள்கிறார்கள். நாம் கேட்பது, நாட்டில் வளர்ச்சி சரிகிறது… மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது… வேலைவாய்ப்பு இல்லை என்று சொன்னால், பி.ஜே.பியும், அதிமுகவும் மக்களைப்பற்றி கவலைப்படாமல், மதத்திற்காக கவலைப்படுகிறார்கள்! இதுதான் அவர்களுடைய அரசியல்.

தமிழ்நாட்டில் மதத்திற்கு ஆபத்து என்று அதிமுகவை வைத்துக்கொண்டு, பாஜக பேசுகிறார்கள்! உண்மையில், தமிழ்நாட்டில் பா.ஜ.க. கூட்டணிக்குதான் ஆபத்து! மிஸ்டு கால் கொடுத்தும் கட்சியை வளர்க்க முடியாமல் போனவர்கள், தங்களின் அரசியல் லாபத்திற்கு கடவுள் பெயரை ‘மிஸ்-யூஸ்’ செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் போலி பக்தியை அரசியல் நாடகத்தை இங்கு யாரும் ஏற்க மாட்டார்கள். இது தமிழ்நாடு, தந்தை பெரியார் உருவாக்கிய மண் – அண்ணா வளர்த்த மண் – கலைஞர் அவர்கள் இதை மீட்ட மண் - தமிழ்நாடு அனைத்து மதத்தினரும் தங்கள் உரிமையோடும் – பிற மதத்தினரோடு நல்லிணக்கத்தோடும் வாழுகின்ற மண் இது.

கடந்த 4 ஆண்டு காலத்தில், தமிழ்நாட்டு வரலாறு காணாத அளவிற்கு 3 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம்! அதேபோல், 84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேவாலயங்களையும் – மசூதிகளையும் புனரமைக்க நிதி ஒதுக்கியிருக்கிறோம். இதுதான் நம்முடைய திராவிட மாடல். இதை எல்லாம் பார்த்துதான் மதவாத அரசியல் செய்கின்றவர்களுக்கு பற்றிக் கொண்டு எரிகிறது. அவர்களால் தமிழ்நாட்டிற்கு செய்த வளர்ச்சியைப்பற்றி பேச முடியவில்லை - ஓட்டு கேட்க முடியவில்லை - முடியாது. செய்திருந்தால்தான், சொல்ல முடியும்! அதனால் தான், இப்போது மதத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்று பார்த்தால், அங்கும் தி.மு.க. ஸ்கோர் செய்துவிட்டார்களே என்று கதறிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த படாத பாடுபடுகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லி கொள்வது., மீண்டும் சொல்கிறேன் - இந்த மண், தந்தை பெரியார் பண்படுத்திய மண்! பேரறிஞர் அண்ணாவால் மேன்மைப்படுத்தபட்ட மண்! தலைவர் கலைஞரால், வளர்க்கப்பட்ட மண்! இப்படிப்பட்ட தலைவர்களை நீங்கள் கொச்சைப்படுத்தி வீடியோ போடுகிறீர்கள்! அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது, அண்ணா பெயரில் கட்சி நடத்தும் கூட்டம்! அண்ணா பெயரையே, அவர்கள் அடமானம் வைத்துவிட்டார்கள். இன்றைக்கு, கட்சியை அடமானம் வைத்திருப்பவர்கள்… நாளைக்கு, தமிழ்நாட்டை அடமானம் வைக்க நாம் அனுமதிக்கக் கூடாது! தமிழ்நாடும், தன்மானமுள்ள தமிழ்நாட்டு மக்களும் இந்த மண்ணுக்கு எதிராக பின்னப்படும் சதிவலைகளின் நோக்கத்தை புரிந்து, தமிழினத்திற்கு எதிரானவர்களுக்கும் – எதிரிகளுக்கு துணை போகும் துரோகிகளுக்கும் – ஒருசேர பாடம் புகட்ட வேண்டும்!

உங்களுக்கு அரணாக என்றைக்கும் இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகம், இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எப்பொழுதும் இருப்போம்! இருப்போம்! அதேபோல, நீங்கள் என்றைக்கும் எங்களுக்கு துணையாக இருக்க வேண்டும் என்றார்

Summary

BJP is talking about AIADMK as a threat to religion in Tamil Nadu! In fact, the threat lies with the BJP alliance in Tamil Nadu!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com