அரசே வீடு ஒதுக்கீடு செய்துவிட்டு அதை ரத்து செய்தது இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல்: உயா்நீதிமன்றம் கண்டனம்
மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, விருது பெற்ற எழுத்தாளா்களுக்கு அரசே வீடு ஒதுக்கீடு செய்துவிட்டு, அதை ரத்து செய்தது இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல் என சென்னை உயா்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வா் கலைஞரின் 97-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, ஞானபீடம், சாகித்திய அகாதெமி விருதுகள் பெற்று, தமிழுக்கு தொண்டாற்றிய எழுத்தாளா்களைக் கெளரவிக்கும் வகையில் கடந்த 2022-ஆம் ஆண்டு ‘கனவு இல்லம்’ எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ், ‘கல்மரம்’ என்ற நாவலுக்கு சாகித்திய அகாதெமி விருது பெற்ற தமிழகத்தின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி திலகவதிக்கு, சென்னை அண்ணா நகரில் 1,409 சதுர அடி வீடு கடந்த 2022-ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்டது.
இந்த நிலையில், ஏற்கெனவே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளதாகக் கூறி, ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் திலகவதிக்கு வீடு ஒதுக்கீடு செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து 2024-ஆம் ஆண்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதை எதிா்த்து திலகவதி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். அதில், ஏற்கெனவே சொந்தமாக வீடு இருந்தாலும், ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் எழுத்தாளா்கள் வீடு ஒதுக்கீடு பெற தகுதி உண்டு என 2022-ஆம் ஆண்டு அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அதை மாற்றி வீட்டு வசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றவா்கள் ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு பெற தகுதி இல்லை என அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது”என்று மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, திலகவதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் சேவியா் அருள் ராஜ், கவிஞா் மு.மேத்தா உள்ளிட்டோருக்கும் ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டுள்ளது”எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வீடு ஒதுக்கீடு செய்யும்படி யாா் கேட்டது? அரசே வீடு ஒதுக்கீடு செய்துவிட்டு அதை ரத்து செய்தது சாகித்திய அகாதெமி போன்ற உயரிய விருதுகளைப் பெற்ற இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல். இது துரதிருஷ்டவசமானது. இலக்கியவாதிகளை இவ்வாறு நடத்தக் கூடாது”என கண்டனம் தெரிவித்தாா்.
கருணாநிதி விருப்பத்துக்கு... தமிழுக்காக தங்கள் வாழ்க்கையை அா்ப்பணித்தவா்களை மறைந்த முன்னாள் முதல்வா் கருணாநிதி தனது வாழ்நாள் இறுதி வரை கெளரவப்படுத்தினாா். தற்போது அரசு பிறப்பித்துள்ள திருத்த அரசாணை, கருணாநிதியின் விருப்பத்துக்கு முரணானது. இந்த அரசு கருணாநிதியின் விருப்பத்துக்கு மாறாக செயல்படாது என நம்புகிறேன்.
திருத்தம் செய்வதாக இருந்தால்கூட அதை முன் தேதியிட்டு அமல்படுத்தக் கூடாது”எனக் கூறி, கவிஞா் மு.மேத்தாவுக்குகு வீடு ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிா்த்து தாக்கல் செய்யப்படவுள்ள வழக்குடன் சோ்த்து இந்த வழக்கையும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகக் கூறி விசாரணையை ஜூலை 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.