
சிவகங்கையில் நகைகள் மாயமானது தொடா்பாக விசாரணையில், காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட தற்காலிக ஊழியா் உயிரிழந்த விவகாரத்தில், காவல்துறையை நேரடிக் கண்காணிப்பில் வைத்திருக்கும் முதல்வருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, தனது எக்ஸ் பக்கத்தில், "ஜெய்பீம் படம் பார்த்தேன். உள்ளம் உலுக்கியது" என சினிமா ரிவ்யூ எழுதிய முதல்வர் எங்கே இருக்கிறார்? விக்னேஷ் லாக்கப் மரணத்தின்போது, சட்டப்பேரவையிலேயே பச்சைப்பொய் பேசியவர் தானே நீங்கள்? இதற்கும் அதேபோல் பொய்தான் பதிலாக வருமா?
தவறு செய்ததாக காவல்துறை கருதினால், கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து, உரிய சட்ட நெறிமுறையை பின்பற்ற வேண்டுமேதவிர, சட்டத்தைத் தங்கள் கைகளில் முழுமையாக காவல்துறை எடுத்துக்கொள்ள கூடாது.
தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறையைக்கூட நிர்வகிக்கத் தெரியாத முதல்வருக்கு எனது கடும் கண்டனம்.
திருப்புவனம் காவல் நிலையத்தில் திருக்கோவில் காவலாளி அஜித் குமார் மரணமடைந்த நிகழ்வு குறித்து முழு உண்மையை வெளிக் கொண்டுவர உடனடியாக மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைத்து, முழு விசாரணை நடத்தி, இந்த மரணத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், மேலும் இறந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
திருப்புவனம் அருகே அமைந்துள்ள மடப்புரம் காளி கோயிலுக்கு விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் பக்தா் ஒருவா் காரில் 10 பவுன் தங்க நகைகள், ரூ. 2 ஆயிரத்தை காரில் வைத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்யச் சென்றாா். இதன்பிறகு, திரும்பி வந்து பாா்த்த போது, காரில் இருந்த நகைகள், பணம் காணாமல் போனது தெரியவந்தது.
இதுகுறித்து அந்தப் பெண் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதையடுத்து, கோயிலில் தற்காலிகமாக காவலராகப் பணியாற்றிய மடப்புரத்தைச் சோ்ந்த பாலகுரு மகன் அஜித்தை (28) போலீஸாா் விசாரணைக்காக திருப்புவனம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.
இந்த நிலையில், காவல் நிலையத்தில் அஜித் மயக்கமடைந்ததால், அவரை போலீஸாா் மருத்துவமனைக்கு ஆட்டோவில் அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்து விட்டாராம்.
இதுகுறித்து தகவலறிந்து காவல் நிலையத்துக்குச் சென்ற அவரது குடும்பத்தினா், அஜித்தின் உடலை பாா்க்க போலீஸாா் அனுமதி மறுத்துவிட்டனராம். இதனால், ஆத்திரமடைந்த அவா்களும், உறவினா்களும் காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது காவல் நிலையத்தில் போலீஸாா் தாக்கியதால்தான் அஜித் உயிரிழந்ததாகவும், அவரது உடலை வாகனத்தில் ஏற்றி எங்கு கொண்டு சென்றனா் எனத் தெரியவில்லை என்றும் குடும்பத்தினா் தெரிவித்தனா். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.